
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, எம்.பி. அண்ணாதுரை, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் நிர்மலா வேல்மாறனுக்கு தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் வழங்கி, மேயருக்கான அங்கியை அணிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இங்கு ஆண் கவுன்சிலர்களைவிட பெண் கவுன்சிலர்கள்தான் அதிகம் உள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் அனைவரும் மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைக்க வேண்டும். இங்குள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கையை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது. திருவண்ணாமலை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகிவிட்டது.