
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 வேகன்கள் தீக்கிரையாகின. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து இரு என்ஜின்களுடன் கூடிய 52 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில், வாலாஜா சைடிங்-க்கு புறப்பட்டது. தலா 70,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 வேகன்களில் பெட்ரோல், 45 வேகன்களில் டீசலுடன் புறப்பட்ட அந்த சரக்கு ரயில் அதிகாலை 4.55 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக இரு ரயில் இன்ஜின்கள், ஒரு வேகன் ஆகியவை தனியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், 49 வேகன்களில், 18 வேகன்கள் அடுத்தடுத்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.