
உலகலாவிய மகளிர் தினத்தையொட்டிப் பெண் படைப்பாளர்கள் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது மராம் அல்-மஸ்ரி நினைவுக்கு வந்தார். சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாகத் துருக்கிக்குத் தப்பித்துச் செல்ல முயன்ற அய்லான் எனும் சிறுவன் துருக்கிக் கடற்கரையில் இறந்து கிடந்த காட்சி உலகையே கலங்கடித்தது. சிரியா அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரில் நாட்டின் கட்டுமானங்கள் பெரும்பகுதி அழிந்துவிட, சிரியாவின் தலைநகரம் மட்டும் பரபரப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
பெரும்பான்மையான புறநகர் பகுதிகள் இருள் சூழ்ந்தே காணப்பட்டன. அத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த மராம் அல்-மஸ்ரி, பிரான்சுக்குக் குடிபெயர்ந்த சிரிய நாட்டின் பெண் கவிஞராக அறியப்பட்டு லெபனான் கலாச்சார மன்றத்தின் அடோனிஸ் விருதினைப் பெற்றார்.
சிரியா என்பது சோகம் நிறைந்த நாடாக இருந்தாலும், அதன் சாலைகளில் அமர்ந்து எழுதும் மராம் அல்-மஸ்ரியின் கவிதைகள் உயிர் பெறுகின்றன. கவிதையின் வழியாகச் சத்தமில்லாமல் பறக்கும் ஒரு விமானமாக, அவர் தனது அனுபவங்களையும், சோதனைகளையும், உணர்வுகளையும் சிக்கலான அரசியலுக்கிடையில் பெண்ணிய உரிமைக்காகக் கவிதைகளை நகர்த்துகிறார்.
அரபுச் சமூகங்களில் பெண்கள் தனக்கான அடையாளத்திற்காகச் சந்திக்கும் அகப்போராட்டங்களும் பிரிந்துசெல்லும் உடல்களும் மராம் அல்-மஸ்ரியின் ஈரவரிகளில் நனைகின்றன. அன்றாட வாழ்வியல் துக்கங்கள், காதலின் எளிமையான வெட்கம், கண்ணீர் சுரக்கும் எதிர்ப்பென அவரது கவிதைகள் ஒன்று கூடி அழகியலை உருவாக்குகின்றன. “நான் என் உடலைக் கவிதைகளாய்த் துண்டு துண்டாகப் பிழிந்து விடுகிறேன்.” அவரது கவிதையில் நம்மையே நேரில் சந்திப்பதுபோல் ஒரு நெருக்கத்தை உணரமுடிகிறது. அந்த உணர்வு யாருக்கும் புதியதல்ல. ஆனால் அதை மராம் அல்-மஸ்ரி போல வரிகளில் பளிச்செனச் சொல்வது அவரது ஆளுமையே.

நாட்டுப்பற்றினைக் குறிப்புணர்த்தும் கவிதகள் ஆழமான அரசியல் உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தாலும் சிரிய நாட்டின் மீதான பற்றை அதீத உணர்வுகளுடன் நேர்மையாகப் பதிவு செய்கிறார். இவருடைய செயல்பாடுகள் உள்நாட்டுப் போருக்குக் காரணமாக இருந்த அசாத்துக்கு எதிரான புரட்சியை முன்னிருத்துவதாகவே இருக்கின்றன.
சிரியா என்ற தலைப்பில் தனது நாட்டைப் பற்றி எழுதிய கவிதை.
எனக்குச் சிரியா என்பது இரத்தம் கசியும் காயம்
அது எனது தாய் கிடக்கும் மரணப் படுக்கை
அது எனது குழந்தையின் வெட்டப்பட்ட கழுத்து
அது எனது பயங்கரக் கனவும் எனது நம்பிக்கையும்
அது எனது உறக்கமின்மையும் எனது விழி
மரணப் படுக்கைகளும், வெட்டப்பட்ட கழுத்துகளும் உறக்கமின்மையைக் கொடுத்தாலும் வானம் விடிந்துவிடுமென்ற நம்பிக்கையும் எழுகிறது. பெண்ணுக்குரிய இயற்கையான இயல்புகளை உடைத்தும் தனக்கான அடையாளங்களை உதறியும், பண்பாட்டுச் சூழலை விலக்கியும் சுய அடையாளத்தை முன்னிருத்தும் போராட்டமாகயிருந்தது இவரது வாழ்க்கை. இருந்தாலும் கவிதைக் கலை வடிவத்தைக் கையில் எடுத்து, தொடக்கத்தில் காதல் கவிதைகளை எழுதி வந்தார். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு A Red Cherry on a White tiled floor என்ற நூலின் மூலமாக அனைவராலும் அறியப்பட்ட கவிஞரானார். ஜெர்மன், ஸ்பானிஷ், கர்சியன் மொழிகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இத்தாலி, ஜெர்மன், துருக்கி, ஆங்கிலமென எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அரபுக்கவிதை பாணிகள், நாடக வடிவிலான படைப்புகள் போன்ற முக்கிய இலக்கிய வகைகளுக்கு அப்பாற்பட்டு, நவீன சிரியா இலக்கியம் குழந்தைகளுக்கான படைப்புகள், வளரும் தலைமுறையினரை அடையாளப்படுத்தும் குரல்களாகவும் ஒலிக்கின்றன. அதில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்ட எழுத்தாளராக மராம்-அல்-மஸ்ரி தெரிகிறார். டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்ற இவர் வசிகரீக்கும் பெண் குரல்களில் ஒருவராக விளங்குகிறார். 1970களில் இவரது படைப்புகள் அரபு பத்திரிகைகளில் வெளியீடு கண்டன.

மகன் பிரிந்துசென்று முன்னாள் கணவரோடு சிரியாவில் வசித்து வந்தபோது அவருக்காக எழுதப்பட்ட கவிதை இது.
நான் வளர விரும்பவில்லை
நான் வளர விரும்பவில்லை
என் குழந்தை என்னிடம் திரும்பி வந்து
என்னைப் பார்க்கும்போது
என்னை அடையாளம் தெரிந்துகொள்ளும்
என் தாயைப் போல்
நான் இறக்க விரும்பவில்லை
ஏனென்றால் எனக்கொரு குழந்தை இருக்கின்றது
அது என் கரங்களில் இல்லையென்றாலும்
ஒரு நாள் நிச்சயமாக
அவனுக்கு நான் தேவைப்படுவேன்.
மென்மையான நேரடி, அலங்காரமற்ற எழுத்து இவருடையது. அன்றாடங்களின்மீது முக்கியத்துவம் கொடுப்பதும், எளிமையான உருவகங்களைப் பயன்படுத்துதல் போன்ற இவரது கவிதை வடிவம் பாரம்பரியமிக்க அரேபியக்காதல் கவிதைகளின் மரபுகளுடன் முரண்பட்டவையாக இருக்கின்றன. ஒரு இஸ்லாமியப் பெண் பாலியல் பற்றி அடக்குமுறைகளைத் தாண்டி உணர்வுகளை வெளிப்படையாக நிபந்தனையின்றி எழுதுவது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.
என் இதயம் தட்டுவதைக் கேட்கும்போதெல்லாம்
அது அதன் கதவுகளைத் திறக்கிறது.
எவ்வளவு முட்டாள்தனம் என்று கடிந்துகொள்கிறார்.
அமெரிக்காவில் பிரபலமடைந்த பிரெஞ்சு நாட்டுப் பெண்ணியச் சிந்தனைகள் பெண்ணியக் கோட்பாடுகளுக்கான அடிப்படையாக எல்லாயிடங்களிலும் முன்வைக்கப்படுகின்றன. அவை பெண்களுக்கான வாழ்வியல் முறைகளை ஆராயக்கூடிய வகையில் பல்வேறு கேள்விகளுடன் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.
வெவ்வேறு கோணங்களில் உலகம் முழுவதும் பரவி வெற்று வழக்குகளாக இல்லாமல் நீடித்திருக்கும் இலக்கியக் கலை மரபாக, அறிவுத்துறையாக இன்று பெண்ணியம் வளர்ந்து வந்திருக்கிறது. “The Second Sex” எனும் சிமோன் தி போவுவாவின் புகழ்பெற்ற நூல், பெண்கள் சமுதாயத்தில் எவ்வாறு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதை வரலாறு, சமூகம், “பெண் என்பது இரண்டாம் பாலினம்” என வரையறுக்கப்பட்டுள்ள உளவியல் நிலையை விமர்சித்து, பெண்கள் சுயாதீனமாக வாழ்வதற்குக் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் பழமையான பாலின மரபுகளை விலக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முக்கியமான நூல்.

சிரிய நாட்டிலிருந்து எழுந்து வரும் பெண் குரலில் ஒன்றாக, பெண்ணியம் சார்ந்த கவிதைகளை முன் வைக்கிறார் மராம் அல்-மிஸ்ரி.
என்னைப் போன்ற பெண்கள்
என்னைப் போன்ற பெண்களுக்குப்
பேசத் தெரிவதில்லை
ஒற்றைச் சொல் தொண்டையில்
சிக்கிய முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது
அதை விழுங்கியே பழகிவிட்டனர்.
என்னைப் போன்ற பெண்களுக்கு
அழுகையைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை
சாத்தியமற்ற அழுகை
துண்டிக்கப்பட்ட தமனி போல
திடீரெனக் கொட்டுகிறது
என்னைப் போன்ற பெண்கள்
அடிகளை வாங்குகிறார்கள்
அவற்றைத் திருப்பிக் கொடுக்கத் துணிவதில்லை.
அவர்கள் கோபத்தால் நடுங்குகிறார்கள்,
அதை அடக்கிக்கொள்கிறார்கள்
என்னைப் போன்ற பெண்கள்
சுதந்திரத்தைக் கனவு காண்கிறார்கள்
கூண்டுகளில் அடைக்கப்பட்ட
சிங்கங்களைப் போல்
எல்லாக் காலத்திலும் பெண்களுக்கான மாபெரும் ஆயுதமாகயிருப்பது கண்ணீர் என்று சொல்வதுண்டு. மானுடயேற்பு பற்றி அதிகம் பேசினாலும் பெண்களின் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு எந்த நாட்டிலும் குறையில்லை. அழுகையை அடக்கிக்கொண்டு கூண்டில் அடைபட்ட சிங்கத்தினைப் போல் சுதந்திரத்திற்கான கனவினைக் கண்டுகொண்டிருக்கும் பெண்கள் உலகம் முழுவதும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு அடிகளை வாங்கினாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க மனம் துணிவதில்லை. எவ்வளவு கோபம் வந்தாலும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு வெளிப்படையாகக் காட்டாத்துணியாமல் இருப்பதே பெண்களின் பண்பெனக் கட்டமைத்த உலகமிது.
அவள் இதை விட அதிகமாக விரும்பவில்லை:
ஒரு வீடு மற்றும் குழந்தைகள்
அவளை நேசிக்கும் ஒரு கணவன்
ஒரு நாள் அவள் விழித்தெழுகிறாள்
அவளுடைய உயிர்
சன்னலைத் திறந்து ஓடிவிட்டதைக் காண்கிறாள்
பெண்ணிய வரலாற்றின் விழுமியங்களில் பெண்களின் மனம், அடக்குமுறையை, அதிகாரத்தை உடைத்துக்கொண்டு சன்னலைத் திறந்து ஓடி, தூரத்துக் கிளையில் ஏறி அமர்ந்துகொள்ளவே துடிக்கிறது. எவ்வளவு கிளைகள் இடைமறித்தாலும் தாவிச்சென்றுகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

நான் என் கண்ணாடியைப் பார்த்தேன்
அப்போது
மனநிறைவுடன் ஒரு பெண்
பிரகாசமான கண்களுடன்
குறும்புத்தனத்துடன் இனிமையாக
இருப்பதைக் கண்டேன்.
அவளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்
கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்துப் பொறாமைப்படும் பெண்ணின் ஆசை முக்கியமானதல்ல; அதை வெளிப்படையாகச் சொல்லும் குரல், இல்லாமையைச் சொல்ல தூரத்திலிருப்பதைப் பேசத் தூண்டுமொரு குரல். இந்த அவதானிப்பு, காதலுக்குப்பிறகு அன்பைப் பற்றிப் பேசுவதும் தேவைகளைப் பற்றிய அறிதலோடு நின்றுவிடாமல், அன்பை ஆராய்வதும் மேம்படப் பேசுவதும்தான் உயிர்ப்பைத் தருவதாகச்சொல்லத்தூண்டுகிறது.
அரசியல் சமூகப் புரட்சியின் தூண்டலினால் எழுதப்பட்ட இன்னொரு கவிதையும் அதே மன நிலையை வலியுறுத்துகிறது.
நான் என் தந்தையைக் கொன்றேன்
அன்றிரவா அல்லது மறு நாளா
எனக்கு நினைவில் இல்லை.
நான் சிறுமியாக இருந்தபோது
அவர் என்னை அவரது முன்னங்கைகளில் தூக்கியபோது
மறந்துபோன கனவுகளை நிரப்பிக்கொண்டு
அவருடன் இருக்கும் எனது புகைப்படத்துடன்
நான் ஒரு பெட்டியோடு தப்பிச்செல்கிறேன்
ஓர் அழகான சிப்பிக்குள் வைத்து
ஆழமான சமுத்திரத்திற்குள்
நான் என் தந்தையைப் புதைத்துவிட்டேன்
என்னைக் கண்டுபிடித்துவிட்டார்
ஆனால், படுக்கைக்கு அடியில் ஒளிந்துக்கொண்டு
பயத்திலும் தனிமையிலும்
நடுங்கிக்கொண்டிருந்தார்.
அழகான சிப்பிக்குள் வைத்து ஆழமான சமுத்திரத்திற்குள் சிரியாவின் எத்தனை உயிர்கள் மடிந்துகொண்டிருக்கின்றன.

சிரியா இலக்கியம் பொதுவாக அரசியல் சமூக நிலைகள் மற்றும் அதன் சமீபத்திய வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் பெற்றுள்ள பாதிப்புகளால் உத்வேகம் பெற்று முன்னேறிவருகிறது. பெரிய நகரங்களிலும், சிறிய ஊர்களிலும், கிராமங்களிலும் வாழும் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்வியலை உள்ளடக்கிய படைப்புகள் உருவாகிவருகின்றன. பெண் படைப்பாளர்கள் எதிர்கொள்ளும் பரிதாபமானநிலைகளும் முக்கியக் கருப்பொருளாக இருந்து வருகின்றன.
‘இவ்வுலகம் தனது மகனுக்குக் கடினமாக இருக்கிறது’ என்ற கவிதை அகதியாக நாட்டுக்குள் நுழைபவரின் அனுபவத்தைச் சொல்கிறது. அகதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னைக் காண வரும் மகனுக்கான அறிவுரையாக, புதிய நாட்டிற்குள் நுழையும்போது சந்திக்கும் கடுமையான சவால்கள், அவர்களின் மீது செலுத்தப்படும் சமூகத் தாக்குதல்கள், வாழ்வாதாரப் போராட்டங்கள் அனைத்தையும் தனது மகனுக்குச் சொல்லவிளைகிறார். உலகத்தின் கடுமையான நெருக்கடி நிலைமைகளை விளக்கி, அகதிகளுக்கு எதிராக நிலவும் பொருளாதார,சமூக அழுத்தங்களை முதன்மைப்படுத்துகிறார் .
அகதிகளுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையினர் சந்திப்பதுதான் என்றாலும் இந்த உலகம்தான் எவ்வளவு கடுமையானதாக இருக்கின்றது, இயந்திர துப்பாக்கிகளையும், சிறைச்சாலை சுவர்களையும் பார்த்து புதிய இடத்தில் புதிய நாட்டில் உயிர் வாழ வேண்டுமானால் சமூக, பொருளாதாரப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான வல்லமை அவசியம். உலகம் முழுவதும் அகதிகள் நாடு விட்டு நாடு பறந்து சென்றும், இன்னும் சொல்லப்போனால் நடந்தே செல்லும் நிலையையும் நாம் கண்டிருக்கிறோம். இக்கவிதை அகதிகளின் நிலையைத் தனது மகனுக்குச் சொல்வது போல் உருக்கும் படைப்பாக மாறுவதற்கான காரணம் நானும் அயலக வாழ்வினை அனுபவித்து வருவதால் எளிதாக உள்வாங்கமுடிகிறது.
அவர்கள் நிபுணர்களையே விரும்புகிறார்கள்
அவர்கள் வங்கிக் கணக்குகளையே விரும்புகிறார்கள்
நான் உன்னை எச்சரிக்கிறேன்.
இங்கு நீ வந்துவிட்டால்
இதில் மூழ்குவதிலிருந்து தப்பிக்க முடியாது
குடியேறிகளே,
நீங்கள் எப்போதும் சந்தேகப்படுபவராகவே
இருக்கிறீர்கள்
—-
நான் உன்னை எச்சரிக்காவிட்டால்
குடியேறிகள் குழந்தையைப் போல்
உடைந்து போகிறவர்களாகவே வருகிறார்கள்
தனது சொந்தநாட்டு மக்களின்மீது குண்டுகளை வீசியும், தாக்குதலை நடத்தியும் கொன்றுக் குவித்து வந்தது. ஆட்சி அதிகாரத்துக்காக நான்கு பக்கங்களிலும் சிரியா சூறையாடப்பட, சுமார் முப்பது வருடங்கள் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் அசாத். சட்ட அங்கீகாரத்தை எதிர் கட்சிகளுக்கு வழங்க முடியாதென வெளிப்படையாகவே அறிவித்தார். இந்தப் போரில் குர்திஷ் இனத்தவரும் அடங்கியிருந்தாலும் சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் சிரியாவில் ஷியா முஸ்லிமானப் பஷார் அல் ஆசாத் ஆட்சி செய்வதை எதிர்தரப்பு விரும்பவில்லை என்பதும் சிரிய உள்நாட்டுப் போருக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
உயிரைக் காத்துக்கொள்ளவே போராடிக்கொண்டிருக்கும் மக்கள் கலையையும் இலக்கியத்தையும் கவனிக்க முடியுமா? மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள் மீதெல்லாம் மனிதாபிமானமற்ற முறையில் குண்டுகள் வீசப்பட்டன. தொடர் சண்டையால் தெருக்களில் அங்காங்கே கேட்பாரற்ற நிலையில் பிணங்கள் கிடந்தன. போரின் கொடூரம் குடும்பங்களைச் சிதறடித்தன. கை, கால்களை இழந்து நின்ற சிரிய குழந்தைகள் கையில் பொம்மைகளோடு, தெருக்களில் சுற்றித் திரிந்தனர்.
தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போரினால் பலரும் நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றனர். உள்நாட்டிலே அகதிகளாக இருக்கும் நிலைக்குச் சிரிய மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டுப் போர் உச்சத்தையடைந்து ஏராளமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. சிரிய நாடு கண்மூடித்தனமாக அழிந்த அவல நிலையைக் கண்டு உலக நாடுகள் மௌனமாகத்தான் இருந்தன. சிரியா எங்கிருக்கிறதென வரைபடத்தில் மகன் தேடிக்கொண்டிருந்தபோது மத்திய கிழக்கிலிருக்கும் அரபுக் குடியரசு நாடு என்று சுட்டிக்காட்டினேன். மேற்குப் பகுதியில் லெபனான், தென்மேற்கில் இஸ்ரேல், கிழக்கே ஈராக், வடக்கே துருக்கியென நான்கு புறங்களில் சூழப்பட்ட சிரிய நாடு ஷாம் என்ற பெயரில் பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டது. பெரும்பாலும் இங்கு வசிப்பவர்கள் அரபு மொழியைப் பேசக்கூடிய சன்னி முஸ்லிம்கள்.

எங்களுக்கான விழாக்களைத் தேடி
நான் இங்கு வந்திருக்கிறேன்
என் நாடு என்னைப் போலவே மிகச் சிறியது
எங்களது நிலம் எரிந்து கொண்டிருக்கிறது
எங்களது புறாக்கள் வெடிகுண்டு சத்தத்தால் பறப்பதில்லை
எங்களது வானம் கனவு காண்கிறது
அந்த நாட்களை,
எங்களது குழந்தைப் பருவத்தைத் திருப்பித் தாருங்கள்
இது சிரிய நாட்டுச்சிறுமி கஹினா பாடிய பாடல். இவரைப் போல் இன்னும் பல குழந்தைகள் நாள்தோறும் சிரிய மண்ணின் மரணங்களைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். Our Hearts eats back to life, we can hope together என்ற கண் தெரியாத சிறுமி பாடிய பாடலும் மனத்தை நெருடத்தானே செய்கிறது.
இப்போது சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன என்பது ஆறுதல். தன்னிலைகளைக் கொண்ட கவிதைகள் வழியாகத் தொட்டுணரும் கணங்கள் அபூர்வமாகச் சொற்களால் கோர்க்கப்பட்டு, இறுக்கமான அறையிலிருந்து திறந்துவிட்ட சன்னலிலிருந்து புதிய வெளிச்சமும் காற்றும் இன்னும் வேகமாக வீசவேண்டும்.
– சொற்கள் மிதக்கும்