
மும்பையில் சமீப காலமாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வசிக்கும் வெளிமாநில மக்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று கூறி வருகிறார். இந்தி பேசாதவர்களை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, சிவசேனா (உத்தவ்) கட்சித் தொண்டர்களும் சேர்ந்து பொது இடத்தில் அடித்து உதைத்து வருகின்றனர். இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார். ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி இரு தாக்கரேக்களின் கட்சி நிர்வாகிகள் மராத்தி பேசாதவர்களை ஆங்காங்கே தாக்கி வருகின்றனர். தற்போது இந்தி பேசாத ஒரு ஆட்டோ டிரைவரை அடித்திருக்கும் காணொளி வைரலாகி வருகிறது. மும்பை அருகில் உள்ள விரார் ரயில் நிலையம் அருகில் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் பாவேஸ் என்பவர் பேசியபோது ஆட்டோ டிரைவர் இந்தியில் பேசினார்.
உடனே பாவேஸ் `ஏன் மராத்தி பேசவில்லை?’ என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டார். ஆட்டோ டிரைவர் தனக்கு இந்திதான் பேசத்தெரியும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பாவேஸ், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளிடம் இது குறித்து தெரிவித்தார். உடனே இரு கட்சித் தொண்டர்களும் பாவேஸை அழைத்துக்கொண்டு விரார் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நின்ற ஆட்டோ டிரைவரிடம், ‘ஏன் மராத்தி பேசவில்லை’ என்று கேட்டு கட்சித் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர். அதோடு ஆட்டோ டிரைவரை அவர்கள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்தனர். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் பாவேஸ் மற்றும் அவரது சகோதரியிடம் மன்னிப்பு கேட்கும்படி செய்தனர்.
ஆட்டோ டிரைவர் மராத்தியையும், மராத்தி கலாசாரத்தையும் அவமதித்து விட்டதாக அவர்க்ள் குற்றம் சாட்டினர். இது குறித்து விரார் பகுதி சிவசேனா(உத்தவ்) தலைவர் உதய் ஜாதவ் கூறுகையில்,” யாராவது மராத்தியையும், மகாராஷ்டிராவையும், மராத்தி மக்களையும் அவமதிக்க நினைத்தால் அவர்களுக்கு சிவசேனா ஸ்டைலில் பதிலடி கொடுப்போம். ஆட்டோ டிரைவர் மகாராஷ்டிரா குறித்தும், மராத்தியர்கள் குறித்தும் தவறாகப் பேசினார். எனவேதான் தக்க பதிலடி கொடுத்தோம். மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கேட்கும்படி செய்தோம்”என்றார். ஆட்டோ டிரைவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பார்த்தோம். ஆனால் யாரும் புகார் செய்யவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். கடந்த ஒன்றாம் தேதி தானேயில் தெருவோரத்தில் வியாபாரம் செய்த வியாபாரி மராத்தி பேசாததால் அவரை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்து உதைத்தனர். அதன் பிறகு பயந்தர் பகுதியில் இனிப்பு கடையில் இந்தியில் பேசிய ஊழியரை அதே கட்சியினர் அடித்து உதைத்தனர். இத்தொடர் சம்பவங்களை தொடர்ந்து பயந்தரில் வட இந்திய வியாபாரிகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்த பந்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி தொண்டர்கள் மிகவும் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
இதற்கு போலீஸார் ஆரம்பத்தில் அனுமதி கொடுக்க மறுத்தனர். அதனை மீறி எதிர்க்கட்சிகள் இப்பேரணியை நடத்தி முடித்தன. மாநில அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகளில் 1-5வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இந்தித் திணிப்பை கைவிடுவதாக மாநில அரசு அறிவித்தது. இந்த இந்தித் திணிப்பைத் தொடர்ந்தே மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மும்பைக்கு அக்டோபர் அல்லது நவம்பரில் மாநகராட்சி தேர்தல் வருகிறது. எனவே அதனை எதிர்கொள்ள 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ள தாக்கரே சகோதரர்கள் மராத்தியை கையில் எடுத்துள்ளனர்.