
சேலம்: சேலம் வழியாக சென்னை செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் பயணிகள் வசதிக்காக, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையை அடுத்த திருவள்ளுர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், சேலம் – அரக்கோணம் வழித்தடத்தில் சென்னை செல்லக்கூடிய ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து சேலம் வழியாக, கோவை செல்லக்கூடிய சென்னை சென்ட்ரல்- கோவை விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர் சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்- கோவை வந்தே பாரத் விரைவு ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டன.