
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வாரம் தொழிலதிபர் கோபால் கெம்கா என்பவர் தனது காரில் இருந்து இறங்கியபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தற்போது பா.ஜ.க பிரமுகர் சுரேந்திர கேவத் பாட்னாவின் ஷேக்புரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சுரேந்திரா மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றுவிட்டனர்.
சுரேந்திரா உடனே பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் இறந்து போனார்.
இது குறித்துக் கேள்விப்பட்டதும் பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபால் ரவிதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஷியாம் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து கொலை செய்யப்பட்ட பா.ஜ.க பிரமுகரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதோடு மருத்துவர்களைச் சந்தித்து உடலை உடனே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கன்ஹையா சிங் கூறுகையில், ”சுரேந்திரா தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்” என்றார்.
சுரேந்திரா இதற்கு முன்பு பா.ஜ.க-வின் விவசாய அணித் தலைவராக இருந்தார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு படுகொலைகள் நடந்திருப்பது நிதீஷ் குமார் தலைமையிலான அரசு நெருக்கடியைக் கொடுத்து இருக்கிறது.
ஓரிரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள பீகாரில் நடந்துள்ள இப்படுகொலைகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”பாட்னாவில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் உடல் நிலை பற்றி அனைவருக்கும் தெரியும்.
ஆனால் பா.ஜ.கவின் ஒன்றுக்கும் உதவாத இரண்டு துணை முதல்வர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் ராம்கிரிபால் யாதவ் அளித்த பேட்டியில், ”அடிக்கடி படுகொலைகள் நடப்பது கவலையளிக்கிறது. இப்படுகொலைகளுக்கு போலீஸார்தான் காரணமாகும். மக்கள் பயத்தில் வாழ்கின்றனர். இது போன்ற குற்றங்களைத் தடுப்பது நிர்வாகத்தின் கடமை” என்று தெரிவித்தார்.
ராம்கிரிபால் இதற்கு முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்தார். அதோடு லாலு பிரசாத் யாதவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 2014ம் ஆண்டு பா.ஜ.கவில் சேர்ந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் லாலு பிரசாத் மகளிடம் தோல்வி அடைந்தார். பா.ஜ.க தலைவர் படுகொலை தொடர்பாக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் அளித்த பேட்டியில், இன்னும் எத்தனை படுகொலைகள் நடக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.