
பூக்களின் நகரம் என்றும் இந்தியாவின் பூந்தொட்டி என்றும் வர்ணிக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இங்கு நிலவும் காலநிலையின் காரணமாக குண்டல்பேட் பகுதியில் வருடம் முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுவது தனிச்சிறப்பு.
இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மலர் சாகுபடியே முக்கிய பங்காற்றி வருகிறது.
தனித்துவமான சாமந்தி, மல்லி, செண்டுமல்லி போன்ற மலர்கள் மட்டுமின்றி எண்ணெய் வித்தான சூரியகாந்தியும் ஆயிக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
முதலீடு குறைந்த மூன்று மாத மானாவாரிப் பயிரான சூரியகாந்தி, விவசாயிகளுக்கு நல்ல பலன் தரும் பயிராக விளங்குகிறது. குண்டல்பேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மே மாதம் பயிரிடப்பட்ட சூரியகாந்தி செடிகளில் தற்போது பூக்கள் பூத்துக்குலுங்கத் தொடங்கியிருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஒரே சமயத்தில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் காண்போரைக் கவர்ந்து வருகின்றன.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் காடாகக் காட்சியளிக்கும் சூரியகாந்தி மலர்களைக் காண மக்களும் படையெடுத்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக மூன்று மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் பந்திப்பூர் – குண்டல்பேட் சாலையோர தோட்டங்களில் அடர் மஞ்சள் நிறத்தில் அலை அலையாக அசைந்தாடும் சூரியகாந்தி தோட்டங்கள் செஃல்பி ஸ்பாட்டாக மாறியுள்ளன.

புகைப்படங்களை எடுத்துக் கொள்ள ரூ. 20, ரூ. 30, ரூ.50 என ஒருசில தோட்டங்களில் கட்டணமும் வசூலிக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் பூக்களை அறுவடை செய்து விதைகளை ஆலைகளுக்கு அனுப்பும் பயணிகளைத் தொடங்க உள்ளனர்.