
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயனப்படவுள்ளார்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு. பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற லட்சியத்தோடு, 24.7.2025 முதல் 8.8.2025 வரை இரண்டாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டஙளில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.