
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணத்தில் 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.
உயிர் பிழைத்த அந்த ஒருவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி விஸ்வாஸ் (40 வயது).
அதே சமயம், உயிரிழந்த 241 பேரில் அவரது சகோதரர் அஜய்யும் ஒருவர்.
இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக விஸ்வாஸ் உயிர்பிழைத்திருந்தாலும் அந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவர் தவிக்கிறார்.
இது குறித்துப் பேசியிருக்கும் விஸ்வாஸின் உறவினர் சன்னி, “வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் உட்படப் பலரும் விஸ்வாஸ் குறித்து நலம் விசாரிக்க எங்களுக்கு போன் செய்கிறார்கள்.
ஆனால், அவர் யாரிடமும் பேசுவதில்லை. அந்த விபத்து மற்றும் தனது சகோதரரின் மரணத்தால் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.

நடு இரவில் திடீர் திடீரென விழித்துக்கொள்கிறார். அதன்பிறகு அவர் மீண்டும் தூங்குவதே கடினமாக இருக்கிறது.
இதற்கு ஒரு தீர்வு காண இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றோம்.
அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பதால், லண்டனுக்குத் திரும்புவதற்கான எந்தத் திட்டமும் இப்போது இல்லை” என்று கூறினார்.