
தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ஜெயலட்சுமி தம்பதியினர். கார்த்திக் தேனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே ஒன்றறை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது .
இந்நிலையில், ஜெயலட்சுமியை பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். ஜெயலட்சுமிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறிய மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதன் பிறகு ஜெயலட்சுமிக்கு தொடர் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் மயக்கம் அடைந்ததால் மருத்துவருக்கு தகவல் தெரிவித்தும் மூன்று மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவர்கள் ஜெயலட்சுமிக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் அப்போது தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று கூறி அறுவை சிகிச்சை அரங்கிற்கு சென்று கர்ப்பப்பையை எடுத்து விட்டதாவும் அதன் பின்பும் ஜெயலட்சுமிக்கு ரத்த கசிவு நிற்காமல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜெயலட்சுமியை பார்க்க அவரது தாயாருக்கோ கணவருக்கோ அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர் சிகிச்சை அளித்து வருவதாக கூறிய நிலையில் ஜெயலட்சுமி இறந்துவிட்டார்.
ஜெயலட்சுமியின் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என்றும் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக குமுளி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.