
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர்.
நித்யா மேனன் பேசுகையில், “‘தலைவன் தலைவி’ என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச சினிமா இது. எனக்குப் பிடித்த மனிதர்கள்கூட இந்தப் படத்துல பணியாற்றியிருக்கேன்.
இந்தப் படக்குழு எனக்கு ஒரு குடும்பம் மாதிரிதான். எங்களுக்கெல்லாம் இது முக்கியமான திரைப்படம். படம் உங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்னு நம்பிக்கையோடு இருக்கோம். படம் முழுக்கக் காமெடிகள் நிறைந்திருக்கு.

எல்லோருக்கும் அந்தக் காமெடிகள் பிடிக்கும். பாண்டிராஜ் சார் இயக்கத்துல நடிக்கிறதை நான் ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். நானும் விஜய் சேதுபதி சாரும் ஒரு மலையாளப் படத்துல இணைந்து நடிச்சிருந்தோம்.
ஆனா, அந்தப் படத்துல மூணு நாட்கள்தான் நாங்க இணைந்து நடிச்சிருந்தோம். சிறந்ததா இன்னொரு படம் இணைந்து நடிப்போம்னு பேசிட்டு வந்தோம். ‘தலைவன் தலைவி’ படத்தைவிட எங்களுக்கு இன்னொரு நல்ல படம் அமைந்திடாது,” என்றார்.