
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கூறியதாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்சியில் பாதுகாப்புத் துறை ஓய்வூதியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத் துறை ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். அன்றைய தினமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2000 குறைகள் ஒரு மாத காலத்தில் தீர்க்கப்படும்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓய்வூதியர்களின் குறைகளைக் கேட்டறிய 5 பிரச்சார வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த வாகனங்கள் மூலம் 5100 புகார்கள் பெறப்பட்டு அதில் 3 ஆயிரம் புகார்களுக்கு அப்போதே தீர்வு காணப்பட்டது. அதே இடத்தில் தீர்வுகாண முடியாத 2000 புகார்களுக்கு 21 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.