• July 12, 2025
  • NewsEditor
  • 0

மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் பிரபல ரௌடி சிவமணி (30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற்று இரவு வத்தலக்குண்டு அருகே உள்ள திருநகருக்கு வந்தபோது சிவமணி மற்றும் அவரது கூட்டாளிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த கூட்டாளிகள்  காருக்குள் வைத்து சிவமணியின் கழுத்தை அறுத்து அரை உயிராய் துடித்துக் கொண்டிருந்த சிவமணியை  ஒரு குடியிருப்பு பகுதிக்குள் தூக்கிச் சென்று தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

 இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் ரத்த வெள்ளத்தில் பிணம் கிடப்பதாக தகவலறிந்து வந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி செந்தில்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து போலீசார் சிவமணி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் கௌதம், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவமணி கூட்டாளிகளான சூர்யா, மணிகண்டன், அருண், முனியாண்டி மற்றும் கார் டிரைவர் சரத் ஆகியோர் மதுரையில் பதுங்கி இருக்கும் தகவலறிந்து அங்கு சென்று அதிரடியாக கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கேங் லீடராக இருந்த சிவமணி கூட்டாளிகளை படாதபாடு படுத்தி வந்ததாகவும் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து சிவமணியை கூட்டாளிகள் கொலை செய்ததாகவும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வத்தலகுண்டில் மதுரை ரௌடி கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *