
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இது குறித்து மாநில சட்டமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் சுதிர் முங்கந்திவார் எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ”மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருந்த 3367 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. மும்பை மசூதிகளில் 1059 ஒலிபெருக்கிகளும், கோயில்களில் 48 ஒலிபெருக்கிகளும், சர்ச்களில் இருந்த 10 ஒலிபெருக்கிகளும், குருத்வாராக்களில் இருந்த 4 ஒலிபெருக்கிகளும், இதர வழிபாட்டுத்தலங்களில் இருந்து 147 ஒலி பெருக்கிகளும் அகற்றப்பட்டுள்ளது. ஒரு வழிபாட்டுத்தலத்தில் கூட ஒலிபெருக்கி கிடையாது. யாராவது ஒலிபெருக்கியை பொருத்த நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சரியான அனுமதி பெறாமல் யாராவது ஒலிபெருக்கியை பொருத்த நினைத்தால் அப்பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தான் அதற்கு பொறுப்பாகும். இத்திட்டத்தை அமல்படுத்த தேவையான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார். சட்டவிரோத ஒலிபெருக்கிகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசு ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்திலும் தாக்கல் செய்யவேண்டும் என்று முங்கந்திவார் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ”அனைத்து வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படுவதால் ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்திலும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
அரசின் நடவடிக்கையை பாராட்டி பேசிய ஆதித்ய தாக்கரே,”ஒலி மாசுவை கட்டுப்படுத்த முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. விழாக்காலங்களில் தற்காலிகமாக ஒலி பெருக்கி பொருத்த அனுமதி கேட்டு வருபவர்களை அரசு துன்புறுத்தக் கூடாது” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் பட்னாவிஸ், “விதிகளை பின்பற்றி சரியான காரணத்திற்காக முறைப்படி அனுமதி கேட்டு வந்தால் அவர்களை போலீஸார் துன்புறுத்த மாட்டார்கள். ஒலி பெருக்கியை அகற்றும் விவகாரத்தில் போலீஸார் செயல் மிகவும் பாராட்ட தக்கது. அவர்கள் வழிபாட்டு கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டி எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஒலிபெருக்கியை அகற்றி இருக்கின்றனர். இதனால் எந்த வித மதபதட்டமும் ஏற்படவில்லை. மும்பையை ஒலிபெருக்கி இல்லாத நகரமாக போலீஸார் மாற்றிவிட்டனர்” என்றார்.