
‘லாக்கப் மரணங்கள்!’
கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்.
சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவம் தமிழகம் முழுவது அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்டிருந்தார்.
‘தவெக ஆர்ப்பாட்டம்!’
திருமாவளவன், வைகோ போன்ற தலைவர்கள் அஜித் குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய்யும் சிவகங்கைக்கு நேரில் சென்று அஜித் குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து சிவகங்கை சம்பவத்தைக் கண்டித்து தவெக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் கடந்த 4 ஆண்டுகளில், அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த காவல் மரணங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் வைத்து இன்று மாலை சந்திக்கிறார். அவர்களின் குடும்ப நிலையை கேட்டறியும் விஜய், நிதியுதவியும் வழங்கவிருக்கிறார்.
தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் நாளை நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் இந்த குடும்பங்களை பங்கேற்க வைக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.