• July 12, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்து முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த எம்.பி வேலை தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கங்கனா ரனாவத் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இந்த எம்.பி பதவி குறித்து அளித்த பேட்டியில் தனது புதிய வேலை குறித்து கங்கனா ரனாவத் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில்,” நான் எம்.பி பதவியில் இந்த அளவுக்கு வேலை இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தபோது பாராளுமன்றத்திற்கு 60 முதல் 70 நாட்கள் வரவேண்டியிருக்கும் என்று சொன்னார்கள். மற்ற நாட்களில் எனது வேலையை பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். அது எனக்கு சரியாக பட்டது.

ஆனால் இப்போது எம்.பி பதவி அதிக வேலை கொண்டதாக இருக்கிறது. எனக்கு அது நன்றாகப் புரிகிறது. நான் அதை (அரசியல்) மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன் என்று சொல்ல முடியாது. இது மிகவும் வித்தியாசமான வேலை, சமூக சேவை போன்றது. இது எனது பின்னணி அல்ல. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறேன், ஆனால் அது வேறு. ஆனால் நான் எம்.பி.யான பிறகு மக்கள் பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளுடன் என்னிடம் வருகிறார்கள்.

அவர்களுக்கு அது பற்றி கவலையில்லை. அவர்கள் எங்களைப்போன்ற எம்.பிக்களை பார்க்கும்போது, உடைந்த சாலைகள் போன்ற பிரச்னைகளுடன் வருகிறார்கள். அது ஒரு மாநில அரசின் பிரச்னை என்று நான் அவர்களிடம் சொன்னால் அவர்கள், ‘உங்களிடம் பணம் இருக்கிறது, நீங்கள் உங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி செய்து தாருங்கள்’ என்று கூறுகிறார்கள்,” என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா ரனாவத் அரசியலுக்கு வந்த பிறகு அவர் நடித்த எமர்ஜென்சி படம் மட்டும் திரைக்கு வந்திருக்கிறது. அதிகமான நாட்களை சொந்த தொகுதியில் செலவிடுவதால் அவரால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. எமர்ஜென்சி படமும் பெரிய அளவில் வசூலை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *