
சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிறுமிகளுக்கு அந்த விடுதியுடைய உரிமையாளரின் கார் ஓட்டுநர் பழனி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து காப்பகத்தின் உரிமையாளர் அருள்தாஸிடம் கூறியும், பழனி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அந்தக் காப்பகத்திற்கு மாவட்ட குழந்தை நல அலுவலகர்கள் ஆய்வுக்குச் சென்றபோது, அந்தச் சிறுமிகள் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா மற்றும் பழனியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின் போது, அருள்தாஸிற்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீதம் உள்ள குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.