
Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது.
2023-ல் பக்கவாதம் வந்து வலது கையும் காலும் பாதித்தது. இப்போது சர்க்கரை கன்ட்ரோலில் உள்ளது. முன்புபோல் சரியாக நடக்க முடியவில்லை. வலது கையால் ஒன்றும் செய்ய முடியாது. தினமும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். எட்டு மாதங்கள் பிசியோதிராபி செய்து வந்தேன். ஆனால், இன்னமும் வலது கை விரல்களால் எதையும் பிடிக்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
-raja (aburaeesa@gmail.com), விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்
பொதுவாகவே, வலது பக்கம் ஸ்ட்ரோக் பாதிக்கும்போது, பேச்சும், கையின் இயக்கமும் பாதிக்கப்படும். உங்களுக்கு ஏற்பட்ட ஸ்ட்ரோக்கின் தீவிரம் எப்படிப்பட்டது, எவ்வளவு நேரம் கழித்து உங்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது, எத்தனை நாள்கள் கழித்து நீங்கள் குணமாகத் தொடங்கினீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தும் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
நம் மூளையின் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் அல்லது மறுசீரமைத்துக் கொள்ளும் அற்புதமான திறனான நியூரோனல் பிளாஸ்டிசிட்டி என்பது நாம் இறக்கும்வரை நிகழ்ந்துகொண்டே இருக்கும். ஒரேவிதமான இயக்கங்களை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால்தான் அந்த மறுசீரமைப்பு நடந்து, மூளையில் பதியும். ஹேண்ட் கோ-ஆர்டினேஷன் எனப்படும் கை ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். அதில் 80 சதவிகிதம் முன்னேற்றம் தெரிந்தாலே பெரிய விஷயம்.
முதல் வேலையாக நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள வட்டமான டம்ளர், சின்னச் சின்ன பாத்திரங்கள், பவுடர் டப்பா போன்றவற்றைப் பிடித்துப் பார்த்து அவற்றின் வடிவம் மாறுவதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். சில்லறை காசுகளை எடுத்துவைப்பது, புத்தகப் பக்கங்களைத் திருப்புவது, தீக்குச்சிகளை எடுத்துவைப்பது, ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, அதன் மூடியைப் பிடித்துக்கொண்டு நடப்பது, அதே வாட்டர் பாட்டிலை அகலவாக்கில் பிடிப்பது போன்ற விதவிதமான பிடிமானங்களைப் பழகுங்கள்.

பிடிமானம் பழகிவிட்டால், பிறகு அந்தப் பொருள்களை பக்கத்தில் உள்ள இடத்தில் நகர்த்தி வைப்பது, எடுப்பது போன்றவற்றைச் செய்யலாம். இவற்றை எல்லாம் தொடர்ந்து செய்துவந்தாலே உங்கள் கையின் இயக்கத்தில் முன்னேற்றம் தெரியும். உங்கள் இருப்பிடத்துக்குப் பக்கத்தில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் (occupational therapist) என்பவர் இருப்பார். அவரை அணுகினால், மூளைக்கும் கைக்குமான ஒருங்கிணைப்பைக் கொண்டுவந்து, உங்கள் வேலைகளைச் செய்ய வைப்பதற்கான பயிற்சிகளை அவர் கற்றுத் தருவார். இவற்றையெல்லாம் செய்த பிறகு ‘மிரர் இமேஜ் டெக்னிக்’கையும் பின்பற்றலாம். அதாவது கண்ணாடி முன் நின்றுகொண்டு, இரண்டு கைகளுக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுக்கும்போது கண்ணால் கையைப் பார்க்கும்போது இன்னொரு கையும் செய்யும். இதை ‘மிரர் ஆப்ஜக்ட் டிரெய்னிங்’ (Mirror object training) என்று சொல்வோம். இவற்றையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் முன்னேற்றத்தை உணர்வீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.