
குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டது.
அவர்களுக்கிடையேயான சண்டையைச் சமாதானம் செய்ய சச்சின் சகோதரர் நிதினும், அவரது மனைவி பாக்யஸ்ரீயும் வந்தனர். பாக்யஸ்ரீ தனது கையில் 11 மாத குழந்தையை வைத்திருந்தார்.
சண்டை முற்றிய நிலையில் பல்லவியின் கோபம் அவரது மைத்துனர் நிதின் பக்கம் திரும்பியது. அங்குக் கிடந்த திரிசூலத்தை எடுத்து பல்லவி தனது மைத்துனரைத் தாக்கினார். திரிசூலம் தன்னை நோக்கி வந்ததைப் பார்த்த நிதின் சற்று நகர்ந்தார்.
அந்நேரம் பாக்யஸ்ரீ கையில் வைத்திருந்த குழந்தையின் தலையில் திரிசூலம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திலிருந்த பல்லவி, நிதின் மற்றும் சச்சின் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தாக்குதலுக்குப் பயன்படுத்திய திரிசூலத்தில் படிந்து இருந்த ரத்தக்கரையைக் கழுவி இருந்தனர். அதோடு தரையில் கிடந்த ரத்தக்கரையையும் அகற்றி ஆதாரத்தை அழிக்க முயன்றுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.