
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தனியார் சேவைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன.
வெளியூர்களிலிருந்து வேலைக்காக மக்கள் குவியும் இந்நகரங்களில், அலுவலகம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்வதற்கும், அவசரமாக ஓரிடத்துக்குச் செல்வதற்கும் பொதுப் போக்குவரத்தைக் காட்டிலும் சொந்த வாகனம் அல்லது ஆட்டோ, டாக்சி போன்றவைதான் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கின்றன.
ஆனால், பேருந்து, ரயில் கட்டணங்களைக் காட்டிலும் இவற்றில் கட்டணம் பல மடங்கு அதிகம் என்பதால் மக்களுக்கும், ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கும் இடையே பொதுவான கட்டணத்தை அரசே நிர்ணயிப்பது மிக அவசியமானதாக இருக்கிறது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டண முறை நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இன்று பெரும்பாலான ஆட்டோக்கள் இங்கு மீட்டர் கட்டண படி இயங்குவதில்லை.
அதற்கு முக்கிய காரணம் இரண்டு. ஒன்று அரசு, மற்றொன்று ஓலா (ola), உபர் (uber), ரேபிடோ (Rapido) போன்றவற்றின் ஆகியவற்றின் வருகை.
தமிழ்நாட்டில் கடைசியாக 2013 ஆகஸ்டில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தில் மாநில அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, ஆட்டோவில் முதல் 1.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 25 கட்டணமும், அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ. 12 கட்டணமும் வசூலிக்கலாம்.
இரவு 11 முதல் காலை 5 மணி வரை மேற்குறிப்பிட்ட கட்டணத்தோடு 50 சதவிகிதம் வரை அதிகமாக வசூலிக்கலாம்.
இந்தக் கட்டணங்களுக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்த ஆட்டோக்களின் பெர்மிட்டை ரத்து செய்தல், ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு தரப்பில் எடுக்கலாம்.

2013-ல் இது கொண்டுவரப்பட்டபோது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் சுமார் 72 ரூபாய். ஆனால், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 100 ரூபாய்.
பெட்ரோல் விலை 28 ரூபாய் உயர்ந்தபோதும், தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் அரசு செய்யவில்லை.
அரசு இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என 2022-ல் தனிநபர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
செல்போனில் ஒரு ஆப் (App) மூலமாக பிக்கப், டிராப் இடத்தை செலக்ட் செய்து புக் செய்தால் நீங்கள் சொல்லும் இடத்துக்கே ஆட்டோ அல்லது கார் வரும், பேரம் பேசத் தேவையில்லை, செயலியில் காட்டும் தொகையை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ வசூலிக்கப்படாது என்ற கான்செப்ட்டோடு 2010 இறுதியில் ஓலா வந்தபோது பயணிகள் மத்தியில் வரவேற்பும், ஆட்டோ மற்றும் கார் டாக்சி வைத்திருப்போர்களின் மத்தியில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் ஒருசேர உருவானது.

அடுத்து 2013-ல் உபர் களமிறங்கியது. அடுத்தடுத்து இன்று ரேபிடோ மற்றும் பைக் டாக்சி இன்னும் பல பெயர்களில் பல வந்துவிட்டன.
ஆனால், மீட்டர் கட்டணத்தைப் போல அடிப்படை கட்டணம் இதுதான், அதன்பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் இதுதான் கூடுதல் கட்டணம், இரவுநேரத்தில் இத்தனை சதவிகிதம் வரை வசூலிக்கலாம் என்று நிலையான ஒழுங்குமுறையும் இல்லை.
முன்பு மீட்டர் கட்டணத்திலாவது பயணிகளிடமிருந்து ஓட்டுநர் நேரடியாகக் கட்டணம் வசூலிப்பவராக இருந்தார்கள்.

ஆனால், இந்த ஆன்லைன் புக்கிங் செயல்முறைகளில் அந்தந்த ஆப்கள்தான் பயணிகளின் கட்டணத்தையும், ஓட்டுநர்களுக்கான தொகையையும் நிர்ணயிக்கின்றன.
இதில், செயலிகளுக்கான பயன்பாட்டுக் கட்டணம் அந்தந்த நிறுவனங்களுக்குத் தனி. ஆனாலும், பயணிகளுக்கு இது வசதியாக இருந்ததால் ஆட்டோ மற்றும் கார் டாக்சி ஓட்டுநர்களின் எதிர்ப்பு இருந்தும், எந்த மாற்றமும் நிகழவில்லை.
ஒரு கட்டத்துக்குப் பின்னர், ஆட்டோ ஓட்டுநர்களும் வேறு வழியின்றி ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களில் தங்களின் வாகனங்களை இணைக்க ஆரம்பித்துவிட்டனர்.
தமிழக போக்குவரத்துத்துறையின் 2023-24ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்குகின்றன.
ஆனால் இவற்றில் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் செயல்பாட்டிலேயே இல்லை.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த மாத தொடக்கத்தில், ஓலா, உபர், ரேபிடோ போன்ற ஆட்டோ, பைக், கார் டாக்சி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், பீக் ஹவர்ஸ் நேரங்களில் வாடிக்கையாளர்களிடம் அடிப்படைக் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்.
இதில், அடிப்படைக் கட்டணத்தை நிர்ணயிப்பது மாநில அரசின் வசம் உள்ளதால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அடிப்படைக்குக் கட்டணத்தை நிர்ணயித்து இதனைச் செயல்படுத்துமாறு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தில் மாநில அரசு மாற்றம் கொண்டுவராததும், ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டிருப்பதும், பயணிகள் மற்றும் தொழிலாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், இதுபற்றி சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவாஜியைத் தொடர்பு கொண்டோம்.
அப்போது பேசிய சிவாஜி…
“பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளம். ஆட்டோ டாக்ஸிகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் தீர்மானித்து, இதற்கென செயலியை உருவாக்கி, இதிலுள்ள தொழிலாளிகளுக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குங்கள் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து டெல்லியில் போராட்டம் கூட நடத்தி இருக்கிறோம்.
ஆனால், சாதாரண தொழிலாளிகளுக்காக நாம் வைக்கும் கோரிக்கை நிறைவேறவில்லை. தமிழ்நாட்டில் 2013-க்குப் பிறகு மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் போராட்டம் நடத்தியும் ஒன்று நடக்கவில்லை. மீட்டர் கட்டணத்தை தொழிற்சங்கம், அரசு பிரதிநிதிகள், நுகர்வோர் பிரதிநிதிகள் கூடிப் பேசி மாற்றியமைத்துக் கொடுங்கள் என்று அப்போதே நீதிமன்றம் கூறியது.

ஆனாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போது இந்த அரசாங்கம் வந்த பிறகுகூட மீட்டர் கட்டணம், ஆட்டோ செயலி தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம்.
அதிகாரிகளிடம் இதுபற்றி பேசும்போது, நாங்கள் ஏற்பாடு செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்று மட்டும்தான் சொல்கிறார்கள்.
அமைச்சரும்கூட முதலமைச்சரிடம் பேசிவிட்டு மீட்டர் கட்டணத்தை அறிவிக்கிறோம் என்றுதான் சொல்கிறார்.
ஆனால், ஆட்டோக்களை டாக்சிகளை வைத்திருக்கும் சாதாரண தொழிலாளிகளுக்கு அரசாங்கம் எதையும் செய்ய மறுக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் அரசு உதவி செய்கிறது. சாதாரண தொழிலாளர்களை ஒழித்துக்கட்டும் செயலாகத்தான் அரசின் இந்தக் கொள்கையைப் பார்க்க வேண்டியுள்ளது.
சாதாரண நேரத்தில் ஒரு கட்டணம் வாங்குகிறார்கள். பள்ளி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் நேரம், திரும்பும் நேரம் எனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் கட்டணங்களைக் கடுமையாக உயர்த்துகிறார்கள்.
50 ரூபாய் வாங்குகிற இடத்தில் பீக் ஹவர்ஸ் என 100 ரூபாய், 150 ரூபாய் வாங்குகிறார்கள்.
இதுவொரு கொள்ளை. சாதாரண நேரம், பீக் ஹவர்ஸ் என்று பிரிப்பதை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தைப் பறிக்கும் ஏற்பாடாகத்தான் பார்க்க முடியும்.
தமிழ்நாடு அரசு இதுபோன்ற நடவடிக்கைகளுக்குத் துணை போகக் கூடாது. அதை, நடைமுறைப்படுத்தக் கூடாது.”

ஆட்டோ மீட்டர் கட்டணம் குறைந்தபட்சம் 1.5 கிலோமீட்டருக்கு அடிப்படை கட்டணமாக 50 ரூபாயும், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாயும் கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
இன்றைக்கு இருக்கின்ற பெட்ரோல், டீசல் விலைக்கு மத்தியில் இது பொதுமக்களும் ஏற்றுக் கொள்கிற கட்டணம்தான்.
சில இடங்களில் சில ஆட்டோ தொழிலாளிகள் அதிகமாகக் கேட்கும்போது, ஆட்டோக்காரர்கள் நிறையக் கேட்கிறார்கள் என்று மக்களுக்கு அதிருப்தியை உருவாக்குகிறது.
அதைத் தவிர்ப்பதற்கு அரசு இந்தக் கட்டணத்தை நிர்ணயித்தால் பொதுமக்களும் நம்பி ஆட்டோக்களில் வருவார்கள். கேரளாவில் மீட்டர் கட்டணம் என்ற முறையில் நிலையான கட்டணத்தை வசூலிக்கும் முறை இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் முதற்கட்டமாக அரசே செயலி கொண்டு வந்தது. அந்தச் செயலியை அப்டேட் செய்வதற்காகக் கொஞ்ச நாள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
அதைக் கேரளா முழுவதும் கொண்டு செல்வதற்கான முயற்சியில் அரசாங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்குக் கட்டண நிர்ணயம் என்பது முறையாக இருப்பதால், ஓலா உபர் போன்றவற்றால் அங்குப் பெரிதாக வளர முடியவில்லை. மக்கள் அதைப் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை.
இதுவே, தமிழ்நாட்டில் சென்னை போன்ற இடங்களில் பெரிய கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்டோ தொழிலாளிகளுக்கு மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயித்தால் ஓலா, உபர் போன்றவை இங்கும் வளர முடியாது.”
“ஒரு செயலியை உருவாக்க வேண்டும். ஒலா, உபர் போன்ற நிறுவனங்கள் செய்யும்போது அரசாங்கம் செய்ய முடியாதா? அரசே செயலியை உருவாக்கிக் கொடுத்துவிட்டால் ஓலா, உபர் ஆகியவற்றைத் தேடி மக்கள் செல்ல மாட்டார்கள்.
அரசு நிர்ணயிக்கும் கட்டணத்துக்குத்தான் மக்கள் வருவார்கள். ஓலா, உபர் போன்றவை தங்களின் கட்டணத்தைத் தாங்களாகவே தீர்மானிக்கின்றனர்.
கட்டணத்தைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் அரசாங்கத்திற்குத்தான் உண்டு. அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இல்லை.

ஓலா, உபர் போன்றவை ஆட்டோக்களைத் தங்களுடன் இணைக்க ஆரம்பத்தில் சலுகைகளை வழங்கினார்கள். அதனால், சில ஆட்டோ தொழிலாளர்கள் அதில் சேர்ந்தார்கள்.
பின்னர், நம்ம சொந்த ஆட்டோ, பெட்ரோல் டீசல் சொந்த செலவு, சொந்த உழைப்பு இருக்கிறது, ஆனால் நடுவில் ஒரே ஒரு அழைப்புக்காக 25 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று உணர்ந்து, அதில் இணைந்தவர்கள்கூட பெரிதாகப் பலன் ஏதும் இல்லை என்று அதிலிருந்து வெளியே வந்து விட்டார்கள்.” என்று தனது பார்வையையும், கோரிக்கைகளையும் சிவாஜி முன்வைத்தார்.