
விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம் பலம் கூட்ரோட்டில் நடைபெற்ற பிரச்சார பயணத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பழிபோடுவது ஸ்டாலினின் தந்திரம்” என்று அவர் சாடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (ஜூலை 11) மாலை மேற்கொண்டார். வானூர் சட்டப்பேரவைத் தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அவர் பேசியது: ”திமுக தேர்தல் அறிக்கையில் 575 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், திமுகவினரும் சொல்லி வருகின்றனர்.