
விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’.
இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக இப்புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா இன்று (ஜூலை 11) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ‘வேள்பாரி 1,00,000’ வெற்றிச் சின்னத்தைத் திறந்துவைத்து நடிகர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார்.
ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!
அப்போது, “இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு கோபிநாத், ரோகினி, உதயச்சந்திரன் என பெரும் அறிவுசார்ந்தவர்களை அழைத்திருக்கிறார்கள். ஒரு நடிகன் வந்து பேச வேண்டுமென்றால் நடிகர் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். எவ்வளவு படித்தவர், மகாபாரதம், குறள் என எதைப்பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார். இல்லையென்றால் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம். அவரும் எவ்வளவுப் பெரிய அறிவாளி, படித்திருக்கிறார், படித்துக்கொண்டே இருக்கிறார்.
அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இந்த 75 வயதிலும் கூலிங்கிளாஸ்போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்துவரும் இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு யாராவது நினைப்பார்கள் என்றும் யோசித்தேன்.
எனக்குப் பிடித்த நாவலாசியர்களில் ஒருவர் ஜெயகாந்தன்!
இந்த உலகமே புத்தகங்களால் இயங்குகிறது. கதை இல்லாதவர்கள் என இந்த உலகில் யாரும் இல்லை. What is history, His Story தான் history. புத்தகம் வாசிப்பது அருமையான அனுபவம். ராம கிருஷ்ணா ஆசிரமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம். அப்போது வாசிக்க ஆரம்பித்தது. அம்புலி மாமாவில் தொடங்கி வெங்கடேஷ் ஐயங்கார், கே.வி ஐயர், ஜி.பி ராஜரத்தினம், கைலாசம் என இவர்கள் எல்லாம் மிகப்பெரும் நாவலாசிரியர்கள்.
பைலப்பா என்பவர் எழுதிய பர்வா எனும் நாவல் சீனா, ஜப்பான் என 36 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. அருமையான புத்தகம். தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஜாவர் சீதாராமன் எழுதிய உடல் பொருள் ஆனந்தி நாவலில் தொடங்கி ஜானகிராமன், பார்த்த சாரதி, சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ் குமார், ஜெயகாந்தன் எனப் பலரின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். தமிழில் எனக்குப் பிடித்த நாவலாசியர்களில் ஒருவர் ஜெயகாந்தன்.
புத்தகம் வாசித்து நான் அழுதேன்
அவர் குப்பம் சார்ந்து நாவல் எழுதினால் அவர் குப்பத்தில் பிறந்திருப்பாரோ என்றும், பிராமணர் கதை நாவல் எழுதினால் அவர் பிராமணர் என்றோ தோன்றும். யாருக்காக அழுதான் என்ற அவரின் புத்தகம் வாசித்து நான் அழுதேன். அந்தமாதிரியான புத்தகம். அதற்குப் பிறகு மதன் எழுதிய `வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகம். அயல்நாட்டுக்காரர்கள் வந்து நம்மை எப்படியெல்லாம் இம்சைப்படுத்தினார்கள் எனப் படித்தால் கண்களில் ரத்தம் வரும். அவர்கள் வந்து கொடுமை செய்ய ஒரேக் காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பதுதான்.
வேள்பாரி
அதற்குப் பிறகு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், சாண்டியல்யனின் கடல் புறா, சிங்கார ரசம், என்னுடைய ஆசான் கல்கியின் பொன்னியின் செல்வன் எனப் படிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் என் நண்பர் பொன்னியின் செல்வன் போல வேள்பாரி என்ற புத்தகம் வந்திருக்கிறது என அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு அந்த புத்தகத்தை பார்த்தால் மணியன் செல்வத்தின் அற்புதமான ஓவியங்கள் கண்ணை கவர்ந்தது.
கல்கிக்குப் பிறகு அவரைப்போல அற்புதமான எழுத்தாளர்!
கதாசிரியர் வர்ணிப்பதில், கதாப்பாத்திரங்களை உருவாக்குவதில் வாசகர்களை ஈர்த்துவிட்டால் போதும், கதையே அவர்களைக் கொண்டு சென்றுவிடும். அங்குதான் கதாசிரியர் வெற்றிப்பெறுகிறார். வேள்பாரியில் சு.வெங்கடேசனின் பெரும் கற்பனை மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. கல்கிக்குப் பிறகு அவரைப்போல அற்புதமான எழுத்தாளர். இதையெல்லாம் பார்த்து அப்படியே படிக்கத் தொடங்கினேன். ஆனால் படித்து முடிக்கவில்லை. அதற்குக் காரணம் பிரதமர் நரசிம்மராவ்.
1996-ல் அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசும்போது, `எனக்கு அரசியலில் விருப்பம் குறைந்துவிட்டது. மகாராஷ்டிராவில் கண்டாலா என்ற ஊரில் எனக்கு மூன்று ஏக்கர் தோட்டம் இருக்கிறது. அங்கு ஒரு சமையல் காரர், தோட்டக்காரர், டிரைவரை வைத்துக்கொண்டு கடைசிக் காலத்தை அங்கு செலவிடத் திட்டமிட்டிருந்தேன். என்னிடம் 1000 புத்தகங்கள் இருக்கிறது.
6 மொழிகள் எனக்குத் தெரியும். எல்லா மொழியிலிருந்து புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால், ராஜிவ் காந்தி மரணத்துக்குப் பிறகு அதை செய்ய முடியவில்லை. அதனால் பிறகு படித்துக்கொள்ளலாம் என எடுத்துவைத்திருக்கிறேன்’ என்றார். அப்போதிலிருந்து நல்ல புத்தகங்களை பார்த்தால் அப்படித்தான் நானும் என் ஓய்வுக்குப் பிறகு படிக்க வேண்டும் என எடுத்து வைத்திருக்கிறேன். அதில் வேள்பாரியும் ஒன்று. என் குரு கல்கியை பார்க்க முடியவில்லை. இப்போது இருக்கும் இந்தக் கல்கியைப் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
சு.வெங்கடேசனின் கள்ளகபடமில்லா மனம் அவரின் முகத்தில் தெரிகிறது. இந்த வேள்பாரிக்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். அவரின் அடுத்தப் படைப்பு ஊமைத் தேவனின் வரலாறு எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாகக் கூறினார். அந்தப் புத்தகத்துக்காக காத்திருக்கிறோம். அவர் இலக்கியவாதி மட்டுமல்ல, நல்ல அரசியல்வாதியும் கூட. கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை, சித்தாந்தம் அவ்வளவு கடுமையாக இருக்கும்.
இவரை மதுரையில் தேர்தலில் நிற்க வைத்தார்களே அவர்களைப் பாராட்டுகிறேன். 1962-வில் அண்ணாவும் கலைஞரும் தேர்தலை சந்தித்தார்கள். அண்ணாவைவிட பேச்சில் ஒருவர் இல்லை என்கிற அளவு ஆற்றல் பெற்றவர். ஆனால், அந்தத் தேர்தலில் அதில் அண்ணா தோற்றார். கலைஞர் வெற்றிப்பெற்றார். அதற்குக் காரணம் பராசக்தி, மனோகரா, மந்திரிக்குமாரி. தமிழ் ரசிகர்கள் கலையை சாதி, மதம், மொழி என அனைத்தையும் கடந்து ரசிப்பார்கள். அதற்காக உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். நன்றி” என்றார்.
வேள்பாரி Audio Formatல் கேட்க :
https://play.vikatan.com/Velpari-audio-book
வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
https://tinyurl.com/Velpari-Books