• July 11, 2025
  • NewsEditor
  • 0

சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகி `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது.

மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

வேள்பாரி வெற்றிப் பெருவிழா

நான் உறைந்து போய் நிற்கிறேன்!

நிகழ்ச்சியில் பேசிய சு. வெங்கடேசன், “விகடன் குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் சீனிவாசன் சொன்ன ஒரு வார்த்தையில் நான் உறைந்து போய் நிற்கிறேன்.

நூறாண்டுகால ஆனந்த விகடன் வரலாற்றில் எந்த எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு வார்த்தை கிடைத்திருக்காது. `சு. வெ எங்களுக்கு கிடைத்த வரம்’ என்று சொன்னார்.

ஷங்கர் சாரின் கனவு கைகூடும். அந்தக் கனவின் இன்பத்தை இந்த உலகம் அனுபவிக்கும். சூப்பர் ஸ்டார் பொன்னியின் செல்வன் விழாவில் வேள்பாரி பற்றி பேசினார்.

நம் சூப்பர் ஸ்டார் நடத்துநராக இருப்பதற்கு முன்பு கூலி தொழிலாளியாக வேலை பார்த்தபோது, ஒரு நாடகம் பார்த்து இந்த நாடகமே இவ்வளவு நன்றாக இருக்கும்போது நாடகம் உருவாக்கப்பட்ட நாவல் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தேடி தேடி படித்த அனுபவம், அன்று தொடங்கி இன்றுவரை… அதான் சூப்பர் ஸ்டார்.

இந்த விழா வேள்பாரி என்ற நூலின் வெற்றி விழா மட்டுமல்ல. ஒரு நவீன கணினி யுகத்தில் திறன்பேசிகளுக்குள் சமூகம் மூழ்கி விட்டது என்று நம்புகிற ஒரு யுகத்தில், திறன்பேசிகளுக்குள் மூழ்கவில்லை சரியான ஒரு நூலைக் கொடுத்ததால் கொண்டாடுகிற வாசகர்கள் இத்தனை லட்சம் பேர் இருக்கிறோம் என்று உலகத்துக்கு உரக்கச் சொல்லுகின்ற ஒரு விழா.

அறத்தின் விழுமியங்களை மதிப்பவர்கள் யாரும் இல்லை, போற்றுபவர்கள் யாரும் இல்லை, லட்சியவாதமெல்லாம் தகர்ந்து விட்டது என்று பேசிக் கொண்டிருக்கின்ற சூழலில், அறம்தான் தமிழ் சமூகத்தின் ஆற்றலும், உயிரும் என்று உலகத்திற்கு உரக்கச் சொல்கின்ற ஒரு நாவலைக் கொண்டாடுகின்ற விழா.

சு. வெங்கடேசன் - வேள்பாரி வெற்றிப் பெருவிழா
சு. வெங்கடேசன் – வேள்பாரி வெற்றிப் பெருவிழா

25 ஆண்டுகளுக்கு முன்பு பொதிகை மலையில் இருக்கின்ற கணிகை கிராமத்திற்கு சென்றிருந்தேன்.

ஒரு இளைஞன் ஒரு காடெல்லாம் அலைந்து கொண்டிருந்தபோது, `அதோ ஒரு பாறை இருக்கிறதல்லவா அதுதான் எங்களின் வரை’ என்று சொன்னான்.

எனக்குப் புரியவில்லை என்றேன். வரை என்றால் என்ன என்று கேட்டேன்.

`வரை என்றால் எல்லை. அதைத் தாண்டி செல்கின்ற ஆடுதான் தான் வரையாடு’ என்றார். இந்த சொல் ஐயாயிரத்திலிருந்து ஏழாயிரம் ஆண்டுகளுக்குப் பழமையானதாக இருக்கலாம். அந்த சொல்லைப் பயன்படுத்திக்கொண்டு `எத்தனை மணி வரை நிகழ்வு நடக்கும்’ என்று என்னிடம் ஒருவர் இங்கு கேட்டார்.

உலகின் எந்த மொழிக்கு இவ்வளவு பெரிய வளமும், வரலாறும், தொன்மையும், தொடர்ச்சியும் இருக்கும்.

வேள்பாரி என்ற வரலாற்று நாயகன்!

இந்தப் பூமியில் நாம் பார்க்கின்ற சூரியன், நிலவு, நடக்கின்ற நிலம் மிகப் பழமையானது. அதுபோல நாம் பேசுகின்ற தமிழ் மிகப் பழமையானது.

இவ்வளவு பழமையான ஒரு மொழி தனது அனுபவத்தால், இயற்கையை நேசிக்கின்ற, புரிந்துகொள்கின்ற, அது சார்ந்த வாழ்வு என செறிவான பண்பாட்டை உருவாக்கியிருக்கிறது.

ராஜராஜ சோழன்தான் கல்வெட்டில் முதல்முறையாக, `இங்கு தர்மம் காப்போர் பாதம் என் தலை மேல்’ என்று எழுதினான்.

அதற்கு பிறகு பல மன்னர்கள் குளம் வெட்டினாலும், கண்மாய் வெட்டினாலும், கால்வாய் வெட்டினாலும் இதைக் கல்வெட்டுகளில் எழுதினார்கள்.

வேள்பாரி வெற்றிப் பெருவிழா
வேள்பாரி வெற்றிப் பெருவிழா

ஆனால், ஈராயிரம் ஆண்டாக எந்த கல்வெட்டும் பதியாமல் எந்த செப்பேடும் எழுதாமல், அறம் செய்கின்ற எல்லோரின் பாதங்களையும் தன் தோளில் தூக்கி சுமந்த ஒரு வரலாற்று நாயகன் உண்டு என்றால் அவன் வேள்பாரி என்ற வரலாற்று நாயகன்.

இது பாரியின் நூல் மட்டுமல்ல, அவன் பாதங்களைச் சுமக்கின்ற ஒரு நூல். இந்த நாவல் நான் எழுதி முடித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

எனக்குத் தெரிந்து 2,500-லிருந்து 3,000 குழந்தைகளுக்கு வேள்பாரி நாவலிலிருந்து பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

பெருங்கடல்

உலகில் எந்தவொரு எழுத்தாளனுக்கும் வாசக சமூகம் இப்படி ஒரு கைமாறு வழங்கியிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

இது எழுத்தாளனுக்கு வழங்கப்பட்டுள்ள கைமாறு அல்ல, வேள்பாரிக்கும், பரம்புக்கும், இயற்கையை நேசிக்கின்ற வாழ்வுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்ற கைமாறு.

உண்மைக்குள் எவ்வளவு மூழ்குகிறோம், புனைவுக்குள் எவ்வளவு மிதக்கிறோம் என்ற வித்தை தெரிந்து விட்டால், மிதப்பவரின் மோகம் மூழ்குகிற ஈரத்தை உணரும், மூழ்குகிற ஈரம் மிதக்கிற காற்றின் அனுபவத்தை ருசிக்கும்.

சு. வெங்கடேசன் - வேள்பாரி வெற்றிப் பெருவிழா
சு. வெங்கடேசன் – வேள்பாரி வெற்றிப் பெருவிழா

வேள்பாரி, மிதந்து கொண்டே இருக்கிறபோது மூழ்கிக் கொண்டே இருக்கின்ற அனுபவத்தையும், மூழ்கிக் கொண்டே இருக்கிறபோது மிதந்து கொண்டே இருக்கின்ற அனுபவத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

அது உணர்கிற, அனுபவிக்கின்ற ஒரு பெருங்கடல். பாரியின் குடிகளுக்கும், பரம்புக்கும், பாரியின் தமிழ் போல் பறந்து கிடக்கின்ற இந்த வாழ்வில் வேள்பாரி தன்னுடைய பயணத்தை நெடுந்தூரத்துக்கு கொண்டு செல்லும்.” என்றார்.

வேள்பாரி Audio Formatல் கேட்க :

https://play.vikatan.com/Velpari-audio-book

வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

https://tinyurl.com/Velpari-Books

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *