
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி நெருங்கிவரும் நிலையில், மழை காலம் துவங்குவதற்கு முன்பு பட்டாசு தயாரிப்புகளை நிறைவு செய்யும் நோக்கில் பணி வெகு மும்மரமாக நடைபெற்றது வருகிறது. இதில் சில தொழிற்சாலைகள் விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுகிறது.
இப்படி கடந்த இரண்டு வாரங்களில் 3 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி பட்டாசு ஆலைகளே முழுமையான பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே சரவணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வைத்து உயிர்க்கு ஆபத்தான குளோரைடு என்னும் ரசாயன பொருளை பயன்படுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய பேப்பர் வெடிகள் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை மேற்கொள்ள சென்ற போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பின் அந்த வீட்டில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வீட்டின் உரிமையாளர் சரவணன் மற்றும் அவரது மனைவி சுகந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
இந்த மாதிரியான சட்ட விரோத பட்டாசு தயாரிப்புகள் மற்றும் பட்டாசு ஆலைகளை வருவாய்த்துறை முறையாக ஆய்வுகள் செய்யவில்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.