
எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூலை 11) `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்று வருகிறது.
மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
நெறியாளர் கோபிநாத் பேசும்போது, “‘வேள்பாரி’ இந்தப் பெயரைச் சொன்னபோதே அரங்கிலிருந்து வந்த கைத்தட்டல், ஆரவாரமே அதன் ஆற்றலை, அந்தப் பெயர் வாசகர்கள் மனதில் எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதைச் சொல்கிறது… திரைப்படத்தில் ஒரு பெரிய உச்ச நட்சத்திரம் திரையில் தோன்றும்போது வரும் வரவேற்பைப்போல.
எழுத ஏழு ஆண்டுகள் ஆய்வு செய்து, மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் சு.வெங்கடேசன். இந்த நாவலில் அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டியைப்போல வாசகர்களை நாவலுக்குள் அழைத்துச் செல்கிறார். கபிலர் கையை நீலன் பிடித்து அழைத்துச் சென்றார், ஆனால், அவர்கள் இருவர் கையையும் பிடித்து சு.வெங்கடேசன் அழைத்துச் செல்வதைப்போல் இருக்கிறது. அவர்களோடு சேர்த்து, நம்மையும் கூடவே அழைத்துச் சென்று கதை சொல்கிறார்.
எல்லாக் கதாபாத்திரமும் சு.வெங்கடேசன் அவர்கள்தான்
சில நேரம் அப்பா, மகனுக்குச் சொல்வதைப்போல இருக்கிறது அவரது கதை சொல்லல். ஒரு விலங்கு என்று ஆரம்பித்து, `அது தெய்வ வாக்கு விலங்கு… அது எங்கிருந்து வந்தது தெரியுமா?’ என்று குழந்தைக்குக் கதை சொல்வதுபோல சாதாரணமாகக் கதையை ஆரம்பித்து, கதைக்குள் கதை சொல்கிறார். சுதந்திரமாக ஒரு வீரக்கதையை எழுதியிருக்கிறார். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு பூமாலை கட்டுவதைப்போல அதைக் கட்டியிருக்கிறார்.
ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு மனிதன் எப்படி தான் சொல்ல நினைப்பதையெல்லாம் ஒரே புத்தகத்தில் சொன்னான் என்பதுதான். அரசியல், நீதி, நிர்வாகம், கருணை, அறம், காதல், கலவி, வஞ்சனை, துரோகம், ஆத்திரம், எரிச்சல், கவிதை என ஒற்றைப் புத்தகத்தில் அத்தனையையும் பேசியிருக்கிறார்.

இதில் ஒரு சூடசுமம் இருக்கிறது. இந்த நாவலில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் சு.வெங்கடேசன் அவர்கள்தான். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சரியாகப் பயன்படுத்தி, சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான அளவுடன், தான் சொல்ல நினைப்பதைச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
‘ஒரு விலங்கு கடித்தால், அந்த விலங்காக மாறிவிடுவோம்’ என்று ஒரு கற்பனைக் கதையில் படித்திருக்கிறேன். அதுபோல இந்த நாவலைப் படிப்பவர்கள் சு.வெங்கடேசனாகவே மாறிவிடுவார்கள். நமக்கும் அவரைப்போலவே கற்பனையும், எழுத்தும், கதை சொல்லலும் வந்துவிடுவதைப்போல உணர்வோம்.
சந்தேகம் வந்தால், சம்பந்தப்பட்ட நபரிடமே கேட்டுவிடுவதுதான் நல்லது. அந்தப் பண்பு இருப்பதால்தான் ‘நீயா நானா’ நிகழ்ச்சியை இத்தனை ஆண்டுகள் நடத்திக்கொண்டிருக்கிறேன்.
‘மயிலா’ பெயர்தான் எனக்கு மிகவும் பிடித்த பெயர்
இதில் வருவதில் எதெல்லாம் உண்மை, எதெல்லாம் கற்பனை என்று சந்தேகம் வர, அதை அவரிடமே கேட்டேன். மரம், செடி, விலங்கு, பறவை, கொம்பு, கொப்பு என எல்லாவற்றையும் உண்மைத்தன்மை மாறாமல், சங்கத் தமிழ், அகழாய்வுகள், தமிழ்ப் பாடல்கள், தமிழரின் போர் யுக்திகள்… போதாக்குறைக்கு ஏழு ஆண்டுகள் ஆய்வு எனப் பல ஆய்வுகள் செய்து எழுதியிருக்கிறார். நாவலில் வரும் அனைத்தும் அவற்றில் இருக்கின்றன.
‘சூழ்கடல் முதுவன்’ என்ற பெயர், வானிலை அறிவு பெற்றவருக்கு ‘திசை வேளர்’, `நீலன்’, `உதிரன்’, `தேக்கன்’, `முடியன்’, `ஆதினி’ என ஒவ்வொரு பெயரும் அவ்வளவு அழகாக இருக்கிறது. குறிப்பாக நீலனின் காதலி ‘மயிலா’ பெயர்தான் எனக்கு மிகவும் பிடித்த பெயர்.
இதில் கவனிக்கவேண்டியது ஆண்கள் எப்படி வலிமையோடு, அறிவோடு காட்டப்படுகிறார்களோ, அதேபோலத்தான் பெண்களும் காட்டப்படுகிறார்கள். சுதந்திரமான பெண்களாகக் காட்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையில், தமிழ்ப் பெண்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

புத்தகம் இவ்வளவு கனமாக இருக்கிறதே என்று நினைத்தேன். படித்த பிறகுதான் தெரிந்தது, இவ்வளவு உணர்வுகளை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்தப் புத்தகம் இவ்வளவு கனமாகத்தான் இருக்கும். குறிப்பாக, காதலை இவ்வளவு அழகாகச் சொல்லி ரொம்ப நாளாச்சு.
இவை எல்லாவற்றையும்விட, தான் நேசிக்க ஒன்றை, தான் பார்த்த ஒன்றை, தனது கற்பனையெல்லாம் தாண்டிய ஒன்றை, தனது கட்டற்ற சுதந்திரத்தால் கிடைத்த உணர்ச்சியையும் தவிப்பையும் வாசிகர்களுக்குக் கொண்டுசேர்ப்பது ஒரு எழுத்தாளருக்கு எளிதானதல்ல. அது மிக இயல்பாக வாய்த்திருக்கிறது சு.வெங்கடேசன் அவர்களுக்கு.
மணியன் செல்வம் ஓவியம் – AI தொழில்நுட்பம்
மணியன் செல்வம் அவர்களின் ஓவியம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், காட்சிகளையும் அவற்றின் தன்மை குறையாமல் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். AI தொழில்நுட்பம் வரட்டும்… இல்லை எது வேண்டுமானாலும் வரட்டும்… ஆனால், இந்த ஓவியத்தில் இருக்கும் உணர்ச்சியை, இப்படிக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை. அதுதான் ஓவியரின் ஆற்றல்’’ என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
வேள்பாரி Audio Formatல் கேட்க :
https://play.vikatan.com/Velpari-audio-book
வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்