
எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது.
மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கபிலரின் மனநிலைதான் எனக்கு இருக்கிறது
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், “இன்றைக்கு, கபிலரின் மனநிலைதான் எனக்கு இருக்கிறது. 2018-ல் புத்தக வடிவில் தோன்றிய `வேள்பாரி’ ஆறு ஆண்டுகளில் ஒரு லட்சம் பிரதிகளை விற்றுத்தீர்த்திருக்கிறது.
`பொன்னியின் செல்வனு’க்கு ஒரு மணியம் என்றால், `வேள்பாரி’க்கு ஒரு மணியம் செல்வன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான வரலாற்றின் நாயகர்களை சு.வெங்கடேசன் தன் எழுத்தால் உயிர் கொடுக்க, அந்த மாபெரும் தலைமுறைக்குத் தன் தூரிகையால் ஓவியம் கொடுத்தார் மணியம் செல்வன்.
தமிழர் அறத்தை, வீரத்தை, மாண்பை இன்றைய இளைய தலைமுறைக்குச் சொன்னது `வீரயுக நாயகன் வேள்பாரி.’
சங்க இலக்கியப் பாடல்களிலிருந்து தகவல்களை எடுத்து, கோர்த்து, தமிழ் மண்ணின் வரலாற்றைச் சொல்வதென்பது குவாண்டம் இயற்பியலைச் செயல்படுத்துபோலச் சிக்கலானது. அதை சு.வெங்கடேசன் சாலச் சிறப்பாகச் செய்தார்.
ஆட்சியாளர்கள் எப்படி ஆள வேண்டும் என்று…
வேள்பாரி’யை மீண்டும் மீண்டும் ஆயிரமாயிரம் பேர் படிக்கிறார்கள். அறம் சார்ந்த வழக்கை எப்படி இருக்க வேண்டும் என்று `வேள்பாரி’ விவரிக்கிறது. ஆட்சியாளர்கள் எப்படி ஆள வேண்டும் என்று இலக்கணம் வகுக்கிறது.
எப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் ஆபத்தானவர்கள் என்பதை அடையாளம் காட்டுகிறது. உலகெங்கும் போர்களால் பேரழிவுகள் நிகழ்ந்துவரும் இன்றைய சூழலில், போருக்கெதிராகத் தமிழ் மக்கள் முழங்கிய வரலாற்றைப் பேசுகிறது.

காலநிலை மாற்றத்தால் இயற்கைச் சீற்றம் அதிகரித்துவிட்ட இன்றைய யுகத்தில், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வியலை நினைவூட்டுகிறது.
அதனால்தான் `வேள்பாரி’ தமிழர்களின் வீடுகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
அறம் சார்ந்த இதழியலைப் பின்பற்றும் விகடனில் `வேள்பாரி’ வெளியானது காலப் பொருத்தம். அடுத்த விழாவின் இலக்கு 10 லட்சம் பிரதிகள். அதன் பிறகு ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் `வேள்பாரி’ இருக்கும் நாள் வரும்.” என்றார்.
வேள்பாரி Audio Formatல் கேட்க :
https://play.vikatan.com/Velpari-audio-book
வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்