• July 11, 2025
  • NewsEditor
  • 0

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பிலிருந்து விலகி அடுத்து இருப்பவர்களுக்கு வழிவிட வேண்டும் எனப் பொருள். மறைந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான மோரோபந்த் பிங்கிளே, 75 வயதை அடைவது என்பது மனதார ஒதுங்கிச் செல்வதற்கான சமிக்ஞை எனக் கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

75 வயதை எட்டிய பிறகு நீங்கள் கௌரவிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வயதாகிவிட்டது எனவே மற்றவர்களை உள்ளே விடுங்கள் எனச் சொல்லாமல் சொல்வதாகும்” என்றார்.

மோகன் பகவத் மற்றும் பிரதமர் மோடி இருவரும் செப்டம்பர் 1950-ல் பிறந்தவர்கள். அதன்படி இந்த செப்டம்பர் மாதம் இருவருக்கும் 75 வயது. எனவே, மோகன் பகவத்தின் பேச்சு பிரதமர் மோடியை சுட்டுவதாக கூறப்படுகிறது.

இந்த விவாதத்தை கையில் எடுத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “ஏழை விருது பெற்ற பிரதமருக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் நினைவூட்டியிருக்கிறார். பிரதமர் மோடியும் அதையே ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கூறலாம். ஏனென்றால் அவருக்கும் செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “பிரதமர் மோடியும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டுஅலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வழிகாட்டிக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

மோகன் பகவத் – மோடி | RSS – BJP

சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத், “எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்கள் 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெறுமாறு பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். அதே விதியை அவர் இப்போது தனக்கும் பயன்படுத்துகிறாரா என்று பார்ப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 2023-ல்,“பா.ஜ.க-வின் அரசியல் விதியில் ஓய்வு விதி என எதுவும் இல்லை. எனவே, பிரதமர் மோடி 2029 வரை தொடர்ந்து நாட்டை வழிநடத்துவார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *