
மத்தியப் பிரதேசத்தின் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் சிற்றுண்டி, பழங்கள் சாப்பிட்டதற்காக 85 ஆயிரம் ரூபாய் உணவு பில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் பத்வாஹி கிராமத்தில் ஜல் கங்கா சம்வர்தன் மிஷனின் கீழ் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்காக சிற்றுண்டி, பழங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.85,000 ரூபாய் செலவு செய்ததாக பில்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த பில் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், கிராம மக்கள் என்ன 24 பேர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் சிற்றுண்டி, உலர் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான ரசீதை சமர்ப்பிக்கும் போது ஆறு கிலோ முந்திரி, 3 கிலோ திராட்சை, 3 கிலோ பாதாம், ஒன்பது கிலோ பழங்கள், 5 டஜன் வாழைப்பழங்கள், 30 கிலோ சிற்றுண்டிகள் என அந்த பில்லில் இடம்பெற்றுள்ளது.
இந்த பில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி, ஒரு பஞ்சாயத்து கூட்டத்திற்கு இவ்வளவு செலவு தேவையா? என்று இணையதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக ஷாஹ்தோல் மாவட்ட ஆட்சியர் கேதர் சிங் கூறுகையில் “நான் உலர் பழங்களை சாப்பிடுவதில்லை, கூட்டத்திலும் அவற்றை சாப்பிடவில்லை. நான் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியிருக்கிறார்.
இதில் ஏதேனும் மோசடி நடந்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட பஞ்சாயத்து பொறுப்பு தலைமை நிர்வாக அதிகாரி முத்ரிகா சிங் கூறுகையில், “உலர் பழங்கள் இருந்ததா அல்லது எவ்வளவு அளவு இருந்தது என்பது குறித்து எல்லாம் என்னால் இருட்டில் பார்க்க முடியவில்லை. நாங்கள் பில் குறித்து ஆய்வு செய்கிறோம். அங்கு நிறைய பேர் இருந்தனர்” என்று கூறியிருக்கிறார்.