
புவனேஸ்வர்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பிஹார் தேர்தலையும் திருட பாஜக முயல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "ஒடிசா பாஜக அரசாங்கம் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது. அது, ஏழை மக்களிடமிருந்து ஒடிசாவின் செல்வத்தைத் திருடுவது. முன்பு பிஜு ஜனதா தள அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசும் அதையே செய்கிறது. ஒருபக்கம், ஒடிசாவின் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், நலிந்த பிரிவினர், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். மறுபக்கம், 5-6 பெரும் பணக்காரர்களுடன் கை கோத்துக்கொண்டு பாஜக அரசாங்கம் உள்ளது.