• July 11, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, “புதுச்சேரி முழுவதும் `ஸ்வச்தா கார்ப்பரேஷன்’ மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. புதுச்சேரி முழுவதும் குப்பைத் தொட்டிகளை வைத்த அந்த நிறுவனம், அதில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளை எடுத்துச் சென்று குப்பைக்கிடங்கில் குவித்து வந்தது.

அதன்பிறகு அந்தக் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக, பழைய பொருட்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை. அதனால் குப்பைகள் சேகரிக்கப்பட்ட குருமாம்பேட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசுக்கு அபராதமும் விதித்தது தீர்ப்பாயம்.

ஸ்வச்தா கார்ப்பரேஷன் குப்பைகளை தரம் பிரிக்காவிட்டாலும், தெருக்களில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியை ஓரளவு செய்து வந்தது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்ட நிலையில், புதிதாக டெண்டர் விடப்பட்டது.

புதுச்சேரி அரசு

அதில் அனுபவம் வாய்ந்த பல பெரிய நிறுவனங்கள் பங்கேற்று இருந்த நிலையில், போதிய முன் அனுபவம் இல்லாத `கிரீன் வாரியர்’ என்ற நிறுவனத்தை உள்ளாட்சித்துறை தேர்வு செய்தது. இந்த விவகாரத்தில் பல கோடி லஞ்சம் கைமாறியதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது புதுச்சேரி முழுவதும் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. கைமாறிய லஞ்சத்தாலும், ஆட்சியாளர்களின் அதிகாரப் போட்டியாலும் ஆட்சியாளர்கள் குப்பை பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.

புதிய நிறுவனம் தொட்டிகளை வைக்காமல், வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த வீட்டிற்கும் சென்று இவர்கள் குப்பைகளை சேகரிக்கவில்லை. ஏற்கெனவே குப்பைத் தொட்டிகள் இருந்த இடங்களில், சில இடங்களில் மட்டுமே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரி முழுக்க வீசும் துர்நாற்றம்

அதனால் ஏற்கனவே குப்பை தொட்டிகள் இருந்த இடத்தில் மக்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். தெரு நாய்களும், மாடுகளும் அந்தக் குப்பைகளை உணவிற்காக கிளறுவதால், புதுச்சேரி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. அதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

குப்பை அகற்றும் பணிக்கான டெண்டரில் என்னென்ன நிறுவனங்கள் கலந்து கொண்டன ? அதில் எதனடிப்படையில் கிரீன் வாரியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது ? அந்த நிறுவனம் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் ? அதாவது வீடுகள் தோறும் சென்று குப்பை சேகரிக்க வேண்டுமா ?

அதற்கு எவ்வளவு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும் ? தினமும் எந்த நேரத்தில் அவர்கள் வீடுகளுக்கு வந்து குப்பைகளை அகற்றுவார்கள் ? தற்போது சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பது ஏன் ? மீண்டும் அனைத்து இடத்திலும் குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா ?

குப்பை | கோப்புப் படம்

அல்லது தற்போது வைத்துள்ள இடங்களில் இருந்தும் குப்பை தொட்டிகள் எடுக்கப்பட்டு விடுமா? ஸ்வச்தா கார்ப்பரேஷனுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது ? அவர்கள் என்னென்ன பணிகளை செய்தனர் ? கிரீன் வாரியார் நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது ?

அவர்கள் ஸ்வச்தா கார்ப்பரேஷனை விட கூடுதலாக என்னென்ன பணிகளை செய்வார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் மக்களுக்கு உள்ளாட்சித்துறை தெரிவிக்க வேண்டும். அத்துடன் புதுச்சேரி முழுக்க உரிய முறையில் குப்பை அகற்றும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அதிகார போட்டி நடத்தும் இந்த அரசையும், உள்ளாட்சித்துறையையும் கண்டித்து மக்களே போராட்டங்களை நடத்துவார்கள். தி.மு.க அதற்கு துணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *