
‘பனையூர் அப்டேட்ஸ்!’
திமுகவும் அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், அடி மேல் அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்த விஜய்யின் தவெகவும் அரசியல் சூட்டை உணர்ந்து இப்போது கொஞ்சம் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. திமுக அரசுக்கு எதிரான போராட்டம், உறுப்பினர் சேர்க்கை ஆப் அறிமுகம், இரண்டாவது மாநில மாநாடு என பனையூர் பக்கமாக பேச்சு கொடுத்தால் அப்டேட் மழை பொழிகிறார்கள்.
சிவகங்கையில் நடந்த காவல் மரணத்தைத் தொடர்ந்து உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டுக்கு விஜய் நேரில் சென்று வந்தார். முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திடம் தொலைபேசியில் மட்டுமே பேசியிருந்தனர். இதை முன்வைத்து மக்களுக்காக களத்தில் நிற்கும் ஒரே தலைவர் விஜய்தான் என தவெகவின் ஐ.டி விங் கடந்த வாரம் முழுவதும் கபடி ஆடிக்கொண்டிருந்தது.
‘சென்னையில் ஆர்ப்பாட்டம்!’
அஜித்குமாரின் மரணத்தை முன்வைத்து அரசுக்கு எதிராக பல்வேறு மட்டங்களிலிருந்தும் எதிர்க்குரல்கள் எழும்பியிருப்பதால், இந்தச் சூழலை தங்களின் திமுக எதிர்ப்பு அரசியலை இன்னும் வலுப்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விஜய்யின் தரப்பு திட்டமிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் சிவகங்கை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

தவெக சார்பில் இதுவரை பெரிதாக ஆர்ப்பாட்டங்களையோ போராட்டங்களையோ நடத்தியதில்லை. நடந்த ஒன்றிரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டதில்லை. வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், சென்னையில் இருந்தபோதும் விஜய் அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. இது கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டது. அதனால்தான் விஜய்யே இந்த முறை நேரடியாக களத்தில் குதிக்க முடிவெடித்திருப்பதாக பனையூர் தரப்பினர் தகவல் சொல்கின்றனர்.
விஜய் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் ஒரு திட்டம் இருப்பதால்தான், காவல்துறையிடம் முறையாக அனுமதிப் பெற்று தக்க ஏற்பாடுகளோடு ஆர்ப்பாட்டத்தை வடிவமைக்க முடிவு செய்தனர். முதலில் ஜூலை 3, அதன்பிறகு ஜூலை 6 என இரண்டு தேதிகளில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

உடனடியாக நீதிமன்றத்துக்கு சென்றனர். நீதிமன்றமும் உங்களின் மனுக்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியுமா, 15 நாட்களுக்கு முன்பே ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்க வேண்டுமென தெரியாதா என குட்டு வைத்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை சிவானந்தம் சாலையில் முறையாக காவல்துறையின் அனுமதியைப் பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
‘விஜய் பங்கேற்கத் திட்டம்?’
கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் பங்கேற்கும் முதல் ஆர்ப்பாட்டமாக இருக்கலாம் என்பதால் அவரின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கூடுதல் கவனமெடுத்து ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை தன்னுடைய குழுவுடன் வந்து நேரில் ஆய்வு செய்து நிகழ்வை எப்படி எடுத்துச் செல்லலாம் என்றும் முன் தயாரிப்புகளை செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
பொதுச்செயலாளர் ஆனந்த் தமிழகம் முழுவதுமிருந்து நிர்வாகிகளை களமிறக்க திட்டமிட்டிருக்கிறார். இதுவரை 120 மா.செக்களை அறிவித்திருக்கிறார்கள். அத்தனை மா.செக்களும் தங்கள் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்துக்கு கிளம்பி வரும் முடிவில் இருப்பதாகவும் சொல்கின்றனர். குறைந்தபட்சமாக 20,000 நிர்வாகிகளாவது சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டத்தன்று நிற்பார்கள் என்பதே தவெக முகாமின் கணிப்பாக இருக்கிறது.
‘உளவுத்துறை அலர்ட்!’
விஜய் சிவகங்கை சென்று அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதை உளவுத்துறையினர் மோப்பம் பிடிக்கத் தவறிவிட்டனர். அஜித் குமாரின் வீட்டு வாசலில் விஜய்யின் கார் வந்து நிற்கும்போதுதான் உளவுத்துறைக்கே விஷயம் தெரிந்திருக்கிறது. கடந்த முறை கோட்டைவிட்டதைப் போல இந்த முறை ஆர்ப்பாட்டம் சார்ந்த்ய் விஜய்யின் மூவ்மெண்ட்டை தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் உளவுத்துறை தீவிரமாக இருக்கிறது.

13 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை முடித்த கையோடு அடுத்த வாரத்திலேயே உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு செயலியையும் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கவிருக்கிறார். இந்த உறுப்பினர் சேர்க்கை செயலி சம்பந்தமாக மா.செக்களுக்கும் ஐ.டி விங் நிர்வாகிகளுக்குமான பயிற்சி பட்டறை கடந்த 8 ஆம் தேதி பனையூரில் நடந்திருக்கிறது.
‘வார் ரூம்!’
அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு அத்தனை நிர்வாகிகளையும் தேனாம்பேட்டையில் உள்ள ஆதவ்வின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தவெகவுக்கான ‘வார் ரூம்’ யை இந்த அலுவலகத்தில்தான் அமைத்திருக்கிறார்கள். அலுவலகத்தில் வரலாறு படைக்க இன்னும் இத்தனை நாட்கள்தான் இருக்கிறது என 2026 தேர்தலை குறிப்பிட்டு ஒரு கவுண்டவுன் ஓடவிட்டப்பட்டிருக்கிறது.

இந்த கவுண்டவுனை கடந்த 6 ஆம் தேதி விஜய்யே நேரில் வந்து தொடங்கி வைத்திருக்கிறார். வார் ரூமை பார்வையிட வந்த நிர்வாகிகளின் மத்தியில் ஆதவ் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீச்சை இறக்கியிருக்கிறார். ‘உங்களுக்காக 24 மணி நேரமும் கண் துஞ்சாம வேலை பார்க்கப் போறோம். தளபதியை முதலமைச்சர் ஆக்கிட்டுதான் ஓய்வோம்.’ என அவர் நரம்புப் புடைக்கப் பேசியதில் நிர்வாகிகள் புல்லரித்துப் போய் கிளம்பியிருக்கின்றனர்.
‘மதுரையில் மாநாடு?’
ஆர்ப்பாட்டம், ஆப் லாஞ்ச் போன்றவற்றுக்கான வேலை ஒரு பக்கம் நடக்க, மாநாட்டுக்கான வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கின்றனர். தேர்தல் அறிவிப்புக்கு 6 மாதத்துக்கு முன்பு நடக்கும் மாநாடு என்பதால் திருச்சி அல்லது மதுரையில்தான் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கின்றனர். இப்போது மதுரையில் இடம் பார்க்கும் வேலைகளையும் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். மதுரையில்தான் இடம் பார்க்கிறார்கள் என்பது நிர்வாகிகள் மூலம் வெளியே தெரிந்துவிட்டதால் மதுரைக்கு விஜய்யை வரவேற்கும் விதமாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மாதம் ஒரு ஈவன்ட் என மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த விஜய்யும் இப்போது வேகமெடுக்கும் திட்டத்தில் இருப்பதால் அரசியல் களம் இன்னும் சுவாரஸ்யமாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.