
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
எதிர்பாராமல் வசந்தியை சந்தித்தது ஒரு ஆச்சரியம் என்றால் அவள் பேசிய வார்த்தைகள் மேலும் மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டன.
எத்தனையோ நாட்கள் ,இல்லை வருடங்கள் கழித்து பார்க்கிற சந்தோஷம் அலை மோதியது.
“ஹேய்! உன்னை நேற்றுதான் நினைத்தேன். இன்று பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை”.
அவள் பேசிய வார்த்தைகள் உண்மையில் கீதாவை திகைக்க வைத்தது.
நான்கு வருடங்கள் முன்பு வட பழனியில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள். இவள் வீடு கட்டிக்கொண்டு அடையாறு வந்து விட்டாள். அதன்பிறகு சந்திக்க வாய்ப்பே ஏற்படவில்லை.
“எதற்காக திடீரென்று என் நினைவு வந்தது!”
அவள் வியப்புடன் கேட்டாள்.
“விகடன் இணைய தளத்தில் கடிதங்கள் எழுதுவது வைத்து ஒரு போட்டி வைத்திருந்தார்கள். அதை பார்த்ததும் உன் ஞாபகம் வந்தது”.
“நான் அதில் ஒன்றும் எழுதவில்லையே!”
“உன் அம்மாவைத்தான் நினைத்தேன். எத்தனை கடிதங்கள் காட்டியிருக்கிறாய்!”
‘அதை எப்படி மறக்க முடியும்?’
‘அட! ஆமாம்! ‘என்றவள் அவளுடன் சேர்ந்து சிரித்தாள். வாரம் ஒரு முறை கடிதம் வருவதை பார்த்து வசந்தி கேட்டபோது அவளிடம் காட்டியது ஞாபகம் வந்தது.
அம்மாவின் கடிதங்கள் வித்தியாசமாக இருக்கும். இன்லன்ட் லெட்டரில் தேதி மட்டும் எழுதிவிட்டு கொஞ்சம் கூட இடம் விடாமல் எழுதுவது அவள் பாணி.
மடிக்கும் ஃப்ளாப்பில் கூட எழுத விஷயம் வைத்திருப்பாள். பொங்கல் சீர் அனுப்பும் மணி ஆர்டர் பாரத்தில் கூட பத்து வரிகளாவது எழுதி விடுவாள்.
நிறைய கடிதங்களை வசந்தியிடம் காண்பித்து சிரித்தது நினைவு வந்தது. எழுதி முடித்து விட்டு இப்படிக்கு அம்மா என்று எழுதக்கூட இடமில்லாமல் ஆரம்பித்த இடத்தில் தேதிக்கு மேல் எழுதி வைத்திருப்பாள்.
போஸ்ட் கார்டில் விலாசம் எழுதும் இடத்தில் கூட இடைவெளிகளில் எழுதி வைத்திருப்பாள். அவள் எழுதும் கடிதங்களுக்கு யாரும் பதில் போடுவதில்லை என்று ரிப்ளை கார்ட் வைத்தால் அதிலும் அவளே எழுதி விடுவாள். அத்தனை விஷயங்கள் வைத்திருப்பாள். போஸ்ட்மேன் வரும்போது எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.
அம்மாவின் நினைவில் அவள் கண்கள் கலங்கின.
‘உனக்கு நினைவு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!’
“வித்தியாசமான கடிதங்கள் இல்லையா! அதனால் மறக்கவே முடியவில்லை . எதைப் பற்றி எல்லாமோ எழுதி இருப்பார்களே! கோலம் போட்டது , மாவு அரைத்தது என்று நினைத்ததை எல்லாம் எழுதி இருப்பார்கள்”.
“அதில் அவளுக்கு ஒரு சந்தோஷம். சில பேரை பேச விட்டால் பேசிக் கொண்டே இருப்பார்கள். .அது மாதிரி “என்றவள்,
“வாயேன்! கொஞ்ச நேரம் பேசலாம்” என்று அருகிலிருந்த ஹோட்டலைக் காட்டினாள்.
“பேசிக் கொண்டே சாப்பிடலாம்.நேற்று முழுவதும் உன் ஞாபகம் தான். இன்றைக்கு பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை”.
அவள் குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
என்னதான் சொல்லு! சில மனிதர்களை மறக்கவே முடிவதில்லை.
“அந்த காலத்து மனிதர்கள் உணர்வு பூர்வமானவர்கள். எல்லாவற்றையும் நேரில் சொல்லவேண்டும் என்று நினைப்பார்கள்”.
” அது என்னவோ நிஜம்தான்! தினமும் போஸ்ட் மேன் வரும் நேரம் காத்திருந்து கடிதம் வந்திருக்கிறதா என்று பார்ப்பதில் அப்படி ஒரு சந்தோஷம்”.
“ஆனால் அவர்கள் எல்லாம் அந்த நேரம் மட்டும் தான் எதிர்பார்ப்பார்கள்.நம் மக்கள் நேரம் காலம் பார்க்காமல் செல்லை பார்த்துக் கொண்டே இருப்பார்கள்”,கிண்டலாக சொன்னவள், “வா,சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்” என்றாள்.
சர்வர் கொண்டு வந்து வைத்த தட்டை நகர்த்தியவள் ,
“என்னதான் இருந்தாலும் அந்த காலம் தனிதான். தனிப்பட்ட மனிதர்கள் எழுதும்கடிதங்களை வைத்தே நிறைய திரைப்படங்கள் கூட வந்திருக்கின்றனவே!” என்று பேச்சைத் தொடர்ந்தாள்.
“ஆமாம்! வெள்ளி விழா என்று ஒரு படம். சிங்கப்பூரிலிருந்து வாணிஶ்ரீ கடிதங்கள் மூலமாக சென்னையிலுள்ள ஜெமினியின் குழந்தைகளை வளர்ப்பதாக காட்டியிருப்பார்கள். கடிதங்கள் அவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன இல்லையா! கண்டிப்பு கனிவு பாசம் எல்லாம் சேர்ந்து வரும் அந்த கடிதங்களுக்கு அவ்வளவு ஆளுமை இருக்கும்.”
“அதில் தானே டெட் லெட்டர் ஆபிஸ் என்று ஒன்று சொல்லுவார்கள்!”
“ஆமாம்! இப்போ யாரும் லெட்டரே எழுதுவதில்லை! நீ வேற ! ” அலுத்துக் கொண்டவள்,”இன்னொரு தோசை சொல்லலாமா! “என்றாள்.
‘நாம் இன்னும் கொஞ்சம் பேசலாம்’ என்று சொல்லிக்கொண்டே சர்வரை அழைத்தாள்.
“அஞ்சல் பெட்டி 520 என்ற படத்தில் சிவாஜி போஸ்ட் பாக்ஸில். போட்ட லெட்டரை திருப்பி வாங்க அத்தனை மெனக்கெடுவார்”.
“இப்போது யாரும் கடிதமே எழுதுவதில்லை.அதற்கு வாய்ப்பும் இருப்பதில்லையே!”
“இப்போ நாம் வாழும் வாழ்க்கை எந்திர மயமாக அல்லவா இருக்கிறது. கால்களில் மெஷினைக் கட்டிக் கொண்டு அல்லவா ஓடிக் கொண்டிருக்கிறோம். பரபரப்பும் பதட்டமும் கோபமும் கூடப் பிறந்தவை ஆகிவிட்டன”.
இது மாடர்ன் யுகம். ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி எல்லாமே வேகம் ,வேகம் ,வேகம் தான்.”.
“அன்றைக்கு வேறு வழியாக தகவல் சொல்ல முடியாதே! தொலை பேசிகளும் அதிகம் வராத காலம்”.
“கல்யாண அழைப்புகள், காதல் கடிதங்கள், வேலை நியமன உத்தரவு கூட தபாலில் தானே வரும்!”

அன்றைய நாட்கள் மனதில் ஊர்வலம் வந்தன. போஸ்ட் மேனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும். கத்தையாக கடிதங்கள் வைத்துக் கொண்டு வருபவரிடம் எனக்கு ஏதாவது லெட்டர் இருக்கிறதா என்று கேட்காதவர்கள் குறைவு.
“நிறைகுடம் படத்திலும் ஒரு கடிதம்தான் பிரச்னையாக இருக்கும். கடைசியில் அந்த ட்விஸ்ட் நன்றாக இருக்கும்”.
“ஆமாம்! சிவாஜியும் வாணிஶ்ரீயும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்”.
“ஆமாம்! எவ்வளவு மாற்றங்கள்! பெரிய விருட்சங்கள் எல்லாம் சுருங்கி விதைகளுக்குள் போய்விட்டன. ஐ மீன் செல்!”
“வியக்கத்தக்க மாற்றம்! விரும்பத்தக்கதா என்று தெரியவில்லை!”
“ஏன் அப்படி சொல்கிறாய்!”
“அன்றைக்கு ஒவ்வொருவருடைய கையெழுத்தும் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும். அந்த கையெழுத்தில் மகனையோ மகளையோ பார்க்கும் பெற்றோர்கள் இருந்தார்கள்.
“ஆமாம்! நீ புகுந்த வீட்டில் சிரமப்படுகிறாய் என்றால் பென்சிலில் எழுது, இல்லாவிட்டால் பேனாவில் எழுது என்று சொல்லி கடிதம் வந்ததும் அப்பா! நல்லவேளை பேனாவில்தான் எழுதியிருக்கிறாள் என்று நிம்மதியையும், கடைசி வரியில் பென்சில் கிடைக்கவில்லை, அதனால் பேனா என்ற வரி மனதில் கலக்கம் ஏற்படுத்துவதையும் அழகாக காட்டியிருப்பார்கள் இல்லையா?”
“மாற்றம், முன்னேற்றம் எல்லாம் சரிதான்”.
“ஆனால் இன்றைக்கும் என்றோ எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்திருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்?”
“உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. மனங்கள் இன்னும் மோசம். ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி எல்லாமே வேகம் தான்! இன்றைக்கு கூட ஒரு மாறுதலுக்காகத்தான் இங்கே வந்தேன். ஒரு மாதிரி டல்லடித்தது. நீ வா வீட்டுக்கு ! நிறைய பேசலாம்!” என்றவள் தன்னுடைய முகவரியை கொடுத்தாள்.
“டைம் டேபிள் போட்ட மாதிரி ஒரு வாழ்க்கை. தப்பிக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது”.
“ஆமாம் எப்போதாவது இப்படி பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி வருகிறது.”
“நானும் இங்கே பக்கத்தில்தான் இருக்கிறேன். அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம்!”
லயிப்புடன் காஃபியை அருந்தியவள், “இன்றைக்கு நன்றாக டைம் போச்சு. எப்பவும் கணிணியே கதியா இருந்து இருந்து போரடித்து விட்டது”.
என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள்.
“ஆமாம்! நல்ல ஒரு சேஞ்ச்!” என்றவள் கை கொடுத்துவிட்டு கிளம்பினாள். அவர்கள் இருவருக்குமே மனம் முழுவதும் அருவியில் குளித்தது மாதிரி சந்தோஷமாக இருந்தது.
-Kanthimathi Ulaganathan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!