
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி-யுமான சசிதரூர் சொந்த கட்சி தலைமையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்துவருகிறார்.
பிரதமர் மோடியை அடிக்கடி புகழ்ந்ததன் மூலம் காங்கிரஸ் டெல்லி தலைமையின் கோபத்துக்கு ஆளானார். கேரளா மாநில முதல்வர் வேட்பாளராக பெரும்பாலான மக்கள் விரும்பும் தலைவர் சசிதரூர் என ஒரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வே ரிப்போர்ட்டை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம் சில நாள்களுக்கு முன் காங்கிரஸ் மாநில தலைவர்களின் அதிருப்திக்கு ஆளானார்.
இந்த நிலையில், எமெர்ஜென்சி குறித்து மலையாள நாளிதழ் தீபிகாவில் அவர் எழுதிய கட்டுரையில் இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி ஆகியோரை விமர்சித்துள்ளார். இது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சசிதரூர் அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:
நம் நாட்டு வரலாற்றில் எமெர்ஜென்சி ஒரு இருண்டகாலம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பு வார்த்தைகள் எமெர்ஜென்சி காலத்தில் கடும் சோதனைக்குள்ளாயின. சிறை கொடூரங்களும், விசாரணைகள் இல்லாத கொலைகளும் அரசை எதிர்க்க முயன்றவர்களுக்கு இருண்ட காலமாக மாறியது. மக்களை பயமுறுத்தியது எமெர்ஜென்சி. அந்த காலத்தில் இது எதுவுமே வெளியே தெரியவில்லை.

ஒழுங்குபடுத்துவதற்காக நடவடிக்கைகள் சொல்லமுடியாத அட்டூழியங்களாக மாறின. நீதித்துறை, பத்திரிகைகள், எதிர்கட்சிகளும் தடைச்செய்யப்பட்டதாக இருந்தன.
இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் கட்டாய குடும்ப கட்டுப்பாடு திட்டம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். டெல்லி போன்ற நகரங்களில் சேரிப்பகுதிகளில் உள்ள வீடுகள் இரக்கமற்ற முறையில் இடிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாறினர். அவர்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கவே இல்லை. இதையடுத்து எமெர்ஜென்சி காலத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தியையும் அவரது கட்சியையும் வெளியேற்றி மக்கள் எதிர்ப்பை காட்டினர். இன்று இருப்பது ஜனநாயக இந்தியா என்ற அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியா வளர்ச்சியை எட்டியுள்ளது.” என்று சசிதரூர் அந்த கட்டுரையில் கூறியிருந்தார்.
சசிதரூரின் கருத்துக்கு பதில்கூறவேண்டியது அகில இந்திய தலைமை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி சதீசன் கூறியுள்ளார்.
சசிதரூரின் கட்டுரையை பார்த்தேன். அதுபற்றி எனக்கும் கருத்துகள் உள்ளன. ஆனால் அதை கூற விரும்பவில்லை எனவும் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.முரளீதரன் கூறுகையில், “காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் ஆட்சிக்கு வந்தால் கூட்டணியில் இருந்து ஒருவர் முதல்வர் ஆவார். சசிதரூர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். முதல்வர் ஆவதற்கான சர்வேக்கள் நிறைய உள்ளன. யார் சர்வே நடத்தினாலும் கட்சி முடிவு செய்வதுதான் நடக்கும்” என்றார்.