
நடிகர் கிங் காங் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். ஷங்கர் ஏழுமலை என்ற இவர், கிங்காங் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரிலேயே திரையுலகில் பயணித்து வருகிறார்.
இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதல் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகில் இருக்கும் பலருக்கும் திருமண அழைப்பு விடுத்திருந்தார்.



இந்நிலையில் கடந்த ஜூலை 10-ம் தேதி காலை கிங்காங்கின் மகள் கீர்த்தனா பி.காம்., எம்.பி.ஏ., நவீன் பி.காம்., எம்.பி.ஏ ஆகியோரின் திருமணம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் MPK மஹாலில் நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்கள் பலரும் இத்திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திருமண வரவேற்பு நிகழ்சிக்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கும் நடிகர் கிங்காங், “முதல்வர் ஐயாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது அவர் ரொம்பவும் பிஸியாக இருந்தார். அந்த சமயத்திலும், ‘சரி நான் வருகிறேன்’ எனக் கொஞ்சம் சந்தேகத்துடன் சொன்னார். ஏனென்றால் அவருக்கு அவ்வளவு பணிகள் இருந்தன.

திருமண வரவேற்பு அன்று மாலை முதல்வர் அவர்கள் வருவதாகத் தகவல் வந்தது. தஞ்சாவூரில் முக்கியமான பணியில் இருந்தவர் மாலை 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பி திருச்சி வந்து, திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து சொன்னபடியே என் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் நேரில் வந்தபோது நான் நினைச்சே பார்க்கல.. கையும் ஓடல, காலும் ஓடல. அவர் என் உயரத்தைப் பார்க்கவில்லை. அவர் நினைத்திருந்தால் வராமல் தவர்த்திருக்கலாம். ஆனால், எங்களை மதித்து அவ்வளவு பணிகளுக்கிடையேயும் வெகு தொலைவிலிருந்து வந்து நேரில் வாழ்த்தினார். முதல்வர் ஐயாவின் இந்தச் செயலை எங்கள் குடும்பம் என்றென்றும் மறக்காது” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…