
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு விழுப்புரத்தில் பேசிய அவர், “ஆட்சிக்கு வந்த 50 மாதங்களில் தி.மு.க செய்தது என்ன ?
அம்மா கிளினிக்கை மூடினார்கள்
அ.தி.மு.க கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் ரத்து செய்தது. ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்கை மூடினார்கள். விவசாயக் கடன் ரத்து மற்றும் பசுமை வீடுகள், விலையில்லாக் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டங்கள் என அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டனர்.
மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக ரூ.7,305 கோடியில், 52.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தபட்டது.
ஆனால் அந்த திட்டத்தையும் இவர்கள் நிறுத்திவிட்டனர். விழுப்புரத்தில் பிரமாண்டமான சட்டம் மற்றும் மகளிர் கல்லூரிகளை கொடுத்திருக்கிறோம். கல்விக்கு அடித்தளம் அமைத்தது அ.தி.மு.க அரசுதான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தி.மு.க அறிவித்த 565 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் நாங்கள் வலியுறுத்தியதால்தான் 22 மாதங்கள் கழித்து அதை கொடுத்தனர். அதையும் அனைவருக்கும் தருவோம் என்று கூறிவிட்டு, 1 கோடி பேருக்கு மட்டும் கொடுத்தனர்.
தற்போது மக்களிடம் தி.மு.க ஆட்சி செல்வாக்கை இழந்திருக்கும் நிலையில், இன்னும் 30 லட்சம் பெண்களுக்கு ரூ.1,000 தர இருக்கிறோம் என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் தறிகெட்டு நடக்கும் போதைப் பொருள் விற்பனையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கொலை கொள்ளை அதிகரித்திருக்கிறது.
இதற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என அனைவரும் ஆள்வதற்கு வந்துவிட்டனர். ஆனால் சாதாரண மனிதர்களான நாங்கள் ஆளக் கூடாதா ?

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலித்து, ஆண்டுக்கு ரூ.5,400 கொள்ளையடிக்கிறார்கள். அதனால்தான் தற்போது அமலாக்கத்துறையில் சிக்கியிருக்கிறார்கள்” என்றார். அதையடுத்து திண்டிவனத்தில் பேசியவர், “அறநிலையத்துறையால் கல்லூரி தொடங்க வேண்டாம் என நான் கூறவில்லை.
கல்லூரிகளை அரசே தொடங்கி நடத்தினால்தான் அனைத்து வசதிகளையும் செய்ய முடியும். அதனால்தான் அரசு நிதியில் கல்லூரிகள் வேண்டும் என்றேன். ஆனால் நான் கூறியதை கண், காது, மூக்கு வைத்து திரித்துக் கூறி வருகிறார்கள்” என்றார்.