
புதுடெல்லி: “75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்கள் வேலை செய்ய விட வேண்டும்,” என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி மறைந்த மோரோபந்த் பிங்களே குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “உங்களுக்கு 75 வயது ஆகிறது என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். மிகவும் நகைச்சுவையுடன் பேசக்கூடிய மோரோபந்த் பிங்களே ஒருமுறை பேசும்போது, '75 வயதுக்குப் பிறகு உங்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டால் அதற்கு, நீங்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். நீங்கள் வயதாகிவிட்டீர்கள். எனவே, மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்' என கூறினார்.