
சமீப காலமாக, தெரு நாய்க்கடி பிரச்னை அதிகமாகி கொண்டே போகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, பெங்களூருவில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, பெங்களூருவில் உள்ள தெருநாய்களுக்கு ரூ.2.9 கோடி மதிப்பில் சிக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏன் இந்தத் திட்டம்?
பெங்களூரு மாநகராட்சியே, தெருநாய்களுக்கு உணவு வழங்குவதால், தெருநாய்கள் பொதுமக்களைக் கடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாய்க்கு வழங்கப்படும் உணவு எவ்வளவு?
பெங்களூருவில் கிட்டத்தட்ட 2.8 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக, 8 மண்டலங்களில் இருக்கும் 5,000 நாய்களுக்கு சிக்கன் வழங்கப்பட உள்ளது.
8 மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலங்களிலும் 100 – 125 உணவு வழங்கப்படும் இடம் அமைக்கப்படும்.
தெரு நாய்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும். ஒரு நாய்க்கு வழங்கப்படும் உணவின் விலை ரூ.22.42. அதில் 150 கிராம் சிக்கன் (புரதம்), 100 கிராம் (மாவுச்சத்து), 100 கிராம் காய்கறிகள் (கனிமங்கள்), 10 கிராம் எண்ணெய் (கொழுப்புச்சத்து) இருக்கும். இவைகளில் இருந்து 465 – 750 கிலோ கலோரி எனர்ஜி கிடைக்கும்.
இதற்கு பெங்களூரு மக்களிடையே, ‘நாய்களுக்கு சரியாக கருத்தடை செய்தாலே போதுமானது’ என்று எதிர்ப்பும், ‘இது வரவேற்கதக்க ஒன்று தான்’ என்று ஆதரவும் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.