
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியைக்கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 11) செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எடப்பாடியை விமர்சித்து பேசியிருக்கிறார்.
அவரை எடப்பாடி பழனிசாமி என்று அழைப்பதை விட பல்டி பழனிசாமி என்று அழைக்கலாம். நேற்று முன்தினம் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளே திறக்கக்கூடாது என்றார்.
இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நேற்று அறநிலையத்துறை சார்பில் நான் கல்லூரிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அரசு சார்பில் கல்லூரிகள் தொடங்கினால் ஏற்புடையதாக இருக்கும் என்று சொன்னேன் என்கிறார்.
அவருக்கு நாட்டு நடப்பே தெரியவில்லை. திருக்கோயில்கள் சார்பில் இயங்கும் அத்தனை கல்லூரிகளுக்கும் தேவையான வசதிகளை ஸ்டாலின் செய்துகொடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

அவர்களுக்கும் எடப்பாடியின் கூற்று பொருந்துமா? எடப்பாடி என்ன அரசியல் ஞானியா? மற்ற தலைவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறாரா? அவர் வாயைக் கொடுத்து வசமாக மாட்டிக்கொண்டார். தீர்ப்பு 2026 ஆம் ஆண்டு கிடைக்கும். மக்கள் தீர்ப்பு மகேஷன் தீர்ப்பு. 2026 -க்கு பிறகு எடப்பாடியின் பெயர் மறையும்” என்று சேகர்பாபு விமர்சித்திருக்கிறார்.