
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக அதிமுக நிர்வாகிகள் சார்பில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டன. அதன்படி எடப்பாடி பழனிசாமி டவுன்ஹால் பகுதிக்கும் பிரசாரம் செய்ய சென்றிருந்தார்.
அங்கு ஏற்கெனவே திமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவினர், திமுகவினர் பேனரை மறைத்தபடி தங்கள் பேனரை வைத்ததாக திமுகவினர் புகார் கூறினர். ஒருகட்டத்தில் அதிமுகவினர் வைத்த பேனரை, திமுகவினர் அகற்றியுள்ளனர்.

இதனால் இரண்டு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், இரண்டு தரப்பினரிடமும் சமாதானம் பேச முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றியுள்ளது.
இந்த தகவலறிந்து கோவை திமுக மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் அங்கு வந்துள்ளார். அவர் அங்கு சீருடையில் இருந்த காவல்துறையினரிடம் கடும் கோபத்தில் பேசினார், “திமுககாரன்னா என்ன பைத்தியக்காரனா. நீ என்ன ரவுடியா. உன் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன். மரியாதையா பேசிக்கோ.” என்று ஒருமையில் கண்டித்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், “உக்கடம் காவல் உதவி ஆய்வாளர் அஜய் சர்மா, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கைக்கூலியாக செயல்படுகிறார்.” என திமுகவினர் கோஷம் எழுப்பினர்.