
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் அவரது தந்தைக்கும் நேற்று வீட்டில் இருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டது.
சண்டை முற்றிய நிலையில் ராதிகாவின் தந்தை தீபக் யாதவ் வீட்டில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்து வந்து ராதிகா மீது சரமாரியாக சுட்டார். 5 முறை சுட்டதில் 3 தோட்டாக்கள் ராதிகா மீது பட்டது. உடனே ராதிகா வசித்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வசித்து வந்த தீபக்கின் சகோதரர் ஓடி வந்தார்.
சமையல் அறை பக்கம் ராதிகா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை தீபக்கின் சகோதரரும், அவரது மகனும் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் ராதிகா இறந்து போனார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ராஜேந்திர குமார் கூறுகையில், ”பெண் ஒருவர் துப்பாக்கி தோட்டா காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் நாங்கள் செல்வதற்குள் அப்பெண் இறந்துவிட்டார். இது குறித்து அப்பெண்ணின் தந்தை தீபக் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது”என்றார்.
போலீஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், ராதிகா யாதவ் சொந்தமாக டென்னிஸ் அகாடமி ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்த டென்னிஸ் அகாடமி நடத்துவது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை.
தீபக் யாதவ் சொந்த ஊருக்கு செல்லும் போது, ஊரில் மகளின் சம்பளத்தில் வாழ்வதாக பேசியுள்ளனர். இது தீபக் யாதவிற்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது. எனவே தனது மகளிடம் டென்னிஸ் அகாடமியை மூடும்படி கேட்டார். ஆனால் ராதிகா மறுத்துவிட்டார். இதனால் அவர் கோபத்தில் இருந்தார். ராதிகா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிடுவது வழக்கம். இந்த வீடியோ வெளியிடுவதற்கும் தீபக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இது தொடர்பாக வீட்டில் ராதிகாவிற்கும் தீபக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தீபக் தனது லைசென்ஸ் துப்பாக்கியை எடுத்து வந்து ராதிகாவை சரமாரியாக சுட்டதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி சந்தீப் குமார் கூறுகையில், ”ஆரம்ப கட்ட விசாரணையில் சோசியல் மீடியா பதிவு காரணமாக தந்தை மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இத்துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. தந்தை கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்” என்றார். விசாரணையில் தீபக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.