
கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் நேற்று ( ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மல்லை சத்யா கட்சியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் மல்லை சத்யா குறித்து நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, “நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது பலருக்கும் வருத்தமும் அதிருப்தியும் இருந்தது.
நம் எதிரிகள் துரோகிகளோடு, நம் கட்சியை அளிக்க வேண்டும் என்று வெளியே போனவர்களோடு நாள் தவறாமல் தொடர்பு வைத்திருக்கிறார். 3 முறை என் உயிரைக் காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறியிருக்கிறார். மாமல்லபுரம் கடலில் விழுந்தப்போது காப்பாற்றினார்.

மற்ற இரண்டு முறை எப்போது என்னை காப்பாற்றினார் என்று எனக்கு தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மல்லை சத்யா 7 முறை வெளிநாடுகளுக்குச் சென்ருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட தன்னிடம் தெரிவிக்கவில்லை.
மேலும், அவர் சென்ற இடங்களில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பயன்படுத்தாமல், மாமல்லபுரம் தமிழ்ச் சங்க தலைவர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்” என்று மல்லை சத்யா குறித்து வைகோ காட்டமாகப் பேசியிருக்கிறார்.