
தேனியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் தி. வேல்முருகன், தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருடன் கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது.
அதில் முதலாவதாக தேனி நகரில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். மனநல சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தனர். மருத்துவமனை வளாகத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, சுவர்களில் மழை நீர், கழிவு நீர் கசிந்து சுத்தமின்றி காணப்பட்டன.
இதனைக் கண்ட குழுவின் தலைவர் வேல்முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், “மருத்துவமனை சுகாதாரம் இன்றி காணப்பட்டால் எப்படி நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ள வருவார்கள்? என்று மருத்துவமனை அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
மேலும் ” மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் சில நாள்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம், மருத்துவமனை வளாகம் முழுவதையும் உனடியாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர்.
தேனி அரசு மருத்துவமனை
அடுத்து தேனி பெரிய குளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு `இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48′ திட்டத்தின் கீழ் உயிா்காக்கும் அவசர சிகிச்சைக்காக புதிதாக 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிதாக சிடி ஸ்கேன் வாங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் 7 வருடம் உபயோகிக்கபட்ட பழமையான சிடி ஸ்கேனரை வாங்கியதாக பில்களில் இருந்தது.
இது குறித்து மருத்துவமனையின் இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்ட வேல்முருகன் மதியம் ஆய்வு கூட்டத்தில் இதற்கான பதிலை தர வேண்டும் இல்லையென்றால் “அரசுக்கு தவறான தகவலை காட்டியுள்ளதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அடுத்து தீடீரென பொம்மையாகவுண்டன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் சத்துணவு கூடத்தில் மின்சாரம் இல்லாமல் இருந்தது.

மின்சாரம் இல்லாத உணவுக்கூடம்
அதை பார்த்த வேல்முருகன் “மின்சாரம் இல்லாமல் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் உணவில் பல்லி, பூரான் ஏதாவது விழுந்தால் கூட தெரியாது” என்று கடிந்து கொண்டார். உடனே மின்சார வசதி செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார். மதியம் நடந்த கூட்டத்தில் பேசிய வேல்முருகன் அரசு பள்ளிக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.