
கோவை மாவட்டத்தில், கடந்த 1998 பிப்ரவரி 14-ம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 58 பொது மக்கள் உயிரிழந்தனர். 250 பேர் படு காயமடைந்தனர். தேர்தல் பரப்புரைக்காக வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தின் முக்கிய புள்ளியாக செயல்பட்ட டெய்லர் ராஜா என்பவர் 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அல் – உம்மா தீவிரவாத இயக்கத்தின் தீவிர உறுப்பினராக உள்ள சித்திக் என்கிற டெய்லர் ராஜா கோவையை பூர்விகமாக கொண்டவர். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாவார். அடிப்படையில் டெய்லரான இவர் மீது கோவை, மதுரை, நாகூர் பகுதிகளில் கொலை வழக்குகள் உள்ளன.

சிறை அதிகாரி, ஜெயிலர், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை அவர் கொலை செய்துள்ளார். ராஜா தன் வீட்டில் வெடி குண்டை பதுக்கி, அதை அல் -உம்மா இயக்கத்தின் பல்வேறு நபர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.
எந்த வழக்கிலும் சிக்காமல் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் அவரின் நடமாட்டம் இருப்பதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் அவரை கர்நாடகாவில் வைத்து கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை ஏற்கெனவே அபூ பக்கர் சித்திக், முகமது அலி என்கிற 2 முக்கிய தீவிரவாதிகளை அண்மையில் கைது செய்திருந்தனர். தற்போது டெய்லர் ராஜாவும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.