• July 10, 2025
  • NewsEditor
  • 0

மதிமுக-வில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் அரங்கேறி வருகிறது.

குறிப்பாக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இதில் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனாலும், பிரச்னை சரியானதாகத் தெரியவில்லை.

துரை வைகோ – வைகோ – மல்லை சத்யா |மதிமுக நிர்வாக கூட்டம்

கட்சியிலிருந்து மல்லை சத்யா வெளியேறப்போவதாகவும் பேச்சு அடிபட்டன. இத்தகைய சூழலில், மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டதாகவும், கட்சியிலிருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது எனவும் வைகோ கூறியிருக்கிறார்.

இதற்கு மல்லை சத்யா, “துரை வைகோவுக்காக எனக்குத் துரோகி பட்டம் அளிக்கிறார்” என்று எதிர்வினையாற்றினார். இவ்வாறு, உட்கட்சி மோதல்கள் வெளிப்படையாக அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

அதில், உரையாற்றிய வைகோ, “31 வருடங்களாக உயிரைக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறேன். நம்மைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.

நம்முடைய இயக்கம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். 1995 திருச்சி மாநில மாநாட்டை எந்தப் பத்திரிகையும் எழுதவில்லை.

நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்கள், ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்று அதற்குக் காரணம் சொன்னார்கள்.

வைகோ
வைகோ

இப்போதும், ம.தி.மு.க கரைந்துவிட்டது, வைகோவின் அரசியல் முடிந்துவிட்டது என எழுதுகிறார்கள்.

நேற்று சாத்தூர் கூட்டத்தில் நான் பேசும்போது மின்சாரம் தடைபட்டதால் வெளியே நிற்கலாம் என மண்டபத்திலிருந்து தொண்டர்கள் வெளியே போனார்கள்.

அந்த நேரத்தில், நான் பேசுவதைக் கேட்க ஆட்கள் இல்லை எனப் பதிவு செய்வதற்காக காலி நாற்காலிகளைப் படம் எடுத்தார்கள்.

பத்திரிகைக்காரர்களுக்கு நான் விரோதியல்ல. எமெர்ஜென்சியின்போது பத்திரிகை சுதந்திரத்துக்காக நான் சிறையில் இருந்தவன்” என்று கூறினார்.

தொடர்ந்து மல்லை சத்யா விவகாரம் தொடர்பாக உரையாற்றிய வைகோ, “மூன்று முறை வைகோவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன் என்று ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்.

ஒருமுறை மாமல்லபுரம் கடலில் நடந்தது. அதற்குப் பிறகு, என் உயிருக்கு ஆபத்து வந்து நீங்கள் எங்கே என்னைக் காப்பாற்றினீர்கள்.

தன்னைத் துரோகி பட்டியலில் சேர்க்கிறார் என இன்று கடுமையான முறையில் கூறியிருக்கிறார்.

மல்லை சத்யா
மல்லை சத்யா

இந்த இயக்கத்துக்குத் துரோகம் செய்துவிட்டு சென்றவர்களிடம் நாள் தவறாமல் உரையாடி வந்தவர்தான் இன்றைக்குக் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் துணைப் பொதுச் செயலாளர் (மல்லை சத்யா).

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு முறை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், ஒருமுறை கூட என்னிடம் சொல்லவில்லை. சென்ற இடத்தில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பயன்படுத்தியதில்லை. மாமல்லபுரம் தமிழ் சங்க தலைவர் என்றுதான் பதிவிட்டார்.

நான் ம.தி.மு.க-வில் இருக்கிறேன் என்று சொன்னது கிடையாது. ஒவ்வொரு கட்டத்திலும் நம் இயக்கத்துக்குச் சோதனை வரும்போதெல்லாம் அதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்தபோது, சில வேளைகளில் தவறான முடிவுகளும் எடுத்தேன்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைத்தவன் அல்ல நான். அன்று திருச்சி தி.மு.க மாநாட்டுக்குச் செல்லாமல் போயஸ் கார்டனுக்குச் சென்று அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு.

வைகோ
வைகோ

ஆனால், ஒரு கட்டத்தில் தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை விட்டபோது, இந்தத் தவறை நீங்கள் செய்யக்கூடாது என்று அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் கூறினேன்.

அவரும் அதற்கு உடன்படுகிறேன் என்றார். இது தி.மு.க-வினருக்கே தெரியாது.

எனவே, எந்தச் சூழலிலும் தி.மு.க கூட்டணியில்தான் நாங்கள் இருப்போம்.

அதன் வெற்றிக்குத்தான் நாங்கள் பாடுபடுவோம். திராவிட இயக்கத்தைக் காப்போம்.” என்று கூறி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *