• July 10, 2025
  • NewsEditor
  • 0

’புறம் பேசிப் பொய் சொல்லும் வார்த்தைகளைத் தலைமைக் கழகம் கேட்கக் கூடாது; அப்போதுதான் இயக்கம் வளர்ச்சி பெறும். அதேபோல் ஒன்மேன் ஆர்மியாக இருந்து உத்தரவு போடுவதைத் தவிருங்கள்’ எனக் காட்டமாக தகவலை அனுப்பி விட்டு தவெக-விலிருந்து வெளியேறியிருக்கிறார், சமூக செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான காந்திமதிநாதன்.

தூத்துக்குடி தவெகவில் ஏற்கனவே பல பஞ்சாயத்துகள் போய்க் கொண்டிருக்கையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த இவரது வெளியேற்றமும் முக்கியமான ஒரு பேசுபொருளாகியிருக்கிறது.

என்ன நடந்தது? அவரிடமே பேசினோம்.

தவெக தலைவர் விஜய்

‘’என்னுடைய அப்பா பெரியார் சிந்தனையில் ஈர்க்கப்பட்டு பிறகு அதிமுக-வில் பயணித்தவர். அவர் செய்த ஒரே தவறு ஆர்.எம்.வீ கூடப் போனதுதான். இதை எதுக்குச் சொல்றேன்னா அரசியல் பின்னணி கொண்டதுதான் எங்க குடும்பமும்.

அதுக்காக அந்த ஒரு தகுதியை மட்டும் எடுத்துகிட்டு நான் வரலை. எழுத்து என் விருப்பமா இருந்தாலும், விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பொது வாழ்க்கையில என்னை ஈடுபடுத்திட்டு வர்றேன்.

தூத்துக்குடி பகுதியில் தாது மணல் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், கடல் வளத்தை நாசப்படுத்திய பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டம்னு நிறைய விஷயங்கள்ல களத்துல இறங்கிப் போராடினவன் நான். இது இந்தப் பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் எல்லாருக்குமே தெரியும்.

இந்தப் போராட்டங்களால் நான் தனிப்பட்ட வாழ்க்கையில் இழந்ததும் நிறைய. வம்படியா என்னை சிறையில் அடைச்சாங்க. அதுக்கெல்லாம் பயப்படாம இன்னைக்கு வரைக்கும் என் கொள்கையில் சமரசம் செய்துக்காம வாழ்ந்துட்டு வர்றேன்.

அடிக்கடி நிலைப்பாடை மாத்திக்கிடுற அரசியல் கட்சிகளால்தான் போராட்ட சூழலே உருவாகுதுங்கிறதால இப்ப இயங்கிட்டிருக்கிற அரசியல் கட்சிகள் மீது கொஞ்சம் அதிருப்தியும் உண்டாச்சு, அந்த நேரத்துலதான் நடிகர் விஜய் கட்சி தொடங்கப் போறதா அறிவிச்சார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ங்கிற அவருடைய அந்த வாசகமே என்னை ஈர்க்க, அவரு கூட சேர்ந்து பயணிக்கலாம்னு நினைச்சேன்.

ஆனந்த்
ஆனந்த்

நான் அவருடைய ரசிகர் மன்றத்துல இருந்து வரலை. ஆனாலும் அவருடைய லட்சியம் நிறைவேறினா நல்லா இருக்குமேனுதான் கட்சி தொடங்குனதுல இருந்தே அதுல என்னை இணைச்சுகிட்டு ஆனந்த் சொன்ன பல வேலைகளைச் செஞ்சேன்.

தவெக கட்சி தொடர்பா அதனுடைய நலனில் அக்கறை கொண்டு நான் ஏகப்பட்ட மனுக்களைக் கொடுத்திருக்கேன். அதன்பொருட்டு கொலை மிரட்டல்கலையெல்லாம் எதிர்கொண்டு வர்றேன்.

ஆனா இப்படி நான் பாடுபட்டதெல்லாம் கொஞ்சம் கூட மதிக்கப்படலைங்கிறதுதான் என்னுடைய ஆதங்கம்.

கட்சித் தலைமை சுத்தி இருக்கிற நாலு பேர் சொல்றதை மட்டுமே கண் மூடித்தனமா நம்பக் கூடாது. அந்த நாலு பேர் சொல்றது எல்லாம் உண்மையா இருக்கும்கிறதுக்கு என்ன உத்தரவாதம்?

ஆனந்துடன் காந்திமதிநாதன்

சிவகங்கை கல் குவாரி விபத்து தொடர்பா அறிக்கை வெளியிடணும்; அது தொடர்பா டீடெய்லா ஒரு தகவல் கொடுங்கனு கேட்டாங்க. நானும் ஸ்பாட் விசிட் போய் பல பேர் கிட்டப் பேசி ஏ டூ இசட் என்ன நடந்ததுனு எழுதிக் கொடுத்தேன். தலைவர் பெயரில் அறிக்கை வெளியாகும்னு எதிர்பார்த்தேன். வரலை. அந்தக் குவாரி விபத்து தொடர்பா மட்டும் மூணு முறை எங்கிட்ட இருந்து தகவல்  வாங்கினாங்க. இப்ப வரை அறிக்கை வரலை.

பனையூர் பங்களாவில் குப்பைத் தொட்டியில் போடறதுக்கு எதுக்கு என் வேலை நேரத்தையெல்லாம் வீணடிக்கணும்? இது ஒரு உதாரணம்தான். இது போல் இன்னும் சில விஷய்ங்களூம் இருக்கு.

நான் கண்ணை மூடிட்டு பேசாம இருக்கணுமாம்!

தலைவர் கூட இருக்கிறவங்க தெளிவில்லாதவங்களா இருக்காங்க. அவங்க பேச்சைக் கேட்டுகிட்டு செயல்பட்டா கட்சியை என்னைத்த வளர்க்கிறது?

கொஞ்ச நாளா இந்தப் புழுக்கத்துல இருந்தவனை திடீர்னு வெளியேற வச்சது கடைசியா அவங்க எனக்கு விதிச்ச ஒரு நிபந்தனைதான். சமூக ஆர்வத்துல நான் வழக்கு போடுறதெல்லாம் அரசு ஊழியர்களுக்கெதிரானவையாம். ‘அரசு ஊழியர்கள் ஆதரவு நமக்கு இருக்கு. அதனால நீங்க அவங்களுக்கு எதிரா எதுவும் பேச, இயங்கக் கூடாதுன்னாங்க.

அதாவது அரசு ஊழியர் லஞ்சம் வாங்குறது என் கண் முன்னாடியே நடந்தாக கூட நான் கண்ணை மூடிட்டு பேசாம இருக்கணுமாம்.

சிவகங்கை குவாரி விபத்து

’போங்கடா நீங்களூம் உங்க கட்சியும்’னு சொல்லிட்டேன். என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்க. பொதுநல வழக்கு போடுறேனே, அதுல அரசியல்வாதிகள் பாதிப்பேருன்னா மீதிப்பேர் அவங்க முறைகேட்டுக்குத் துணை போகிற அரசு ஊழியர்கள்தான். நான் எப்படிங்க அவங்களைக் கண்டுக்காம விட முடியும்? அதனாலதான் தெளிவா யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்தேன். இனி என் வழக்கமான பணிகள் எந்த தொய்வுமில்லாம தொடரும்’’ என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *