
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது, “பாட்டாளி மக்கள் வீட்டிற்காகவும், நாட்டிற்காகவும் உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனநிறைவாக இல்லை.
அதனால் தான் பா.ம.க போராடி வருகிறது. கட்சி கொள்கையை மக்களிடம் சொல்லுங்கள், மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்ளுங்கள், மக்களோடு மக்களாக வாழுங்கள். மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்’ என்று தான் பா.ம.க-வில் பயிற்சி பட்டறை அளிக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், வீட்டில் வளர்ச்சிக்கும் உழைப்பவர்கள் பாட்டாளி மக்கள் தான்.
என் பெயரை பயன்படுத்தக் கூடாது
ஐந்து வயது குழந்தை போல் நான் இருப்பதாக சொல்கிறார் அவர்(அன்புமணி). இந்த குழந்தை தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவரை தலைவராக்கியது. எனது பேச்சை கேட்கவிட்டால் என் பெயரை பயன்படுத்தக் கூடாது. என் இன்சிஷிலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தசரத சக்கரவர்த்தி தன் மகன் ராமனை வனவாசம் செல்ல வேண்டும் என ஆணையிட்டவுடன், மகன் ராமனின் முகம் அன்று மலர்ந்த செந்தாமரை போல் மகிழ்ச்சியாக இருந்தது. அன்புமணி செயல் தலைவராக இருந்து மக்களை சந்தியுங்கள் என்கிறோம்.

மத்திய அரசு பருத்திக்கு ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கும்பகோணத்தை தனியாக கொண்டு கும்பகோணம், திருவிடைமருதுார் பாபநாசம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஆன்மீக தலமான, கும்பகோணம் நவக்கிரக கோவில்களுக்கு செல்ல இலவச ஆன்மீக சுற்றுலா வசதியை ஏற்படுத்த வேண்டும். மதுபான கடைகளை அகற்ற வேண்டும்.” என்றார்.
பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி படம் அச்சிடப்பட்ட பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. ம.க.ஸ்டாலினுக்கு அன்புமணி மீதான பாசம் போகவில்லை. உங்களுக்கு(ஊடகங்கள்) தெரியாமலா கூட்டணி வைப்போம். காற்று நுழையாத இடத்தில் கூட, நீங்கள் நுழைய கூடியவர்கள். உங்களிடம் சொல்லி விட்டு தான் கூட்டணியை அறிவிப்போம். ராமதாஸும், அன்புமணியும் சேர்ந்து இருந்தால் கண்ணுக்கு அழகு என்கிறார் ஹெச்.ராஜா. இது அவரது ஆசை `எதுவாக இருந்தாலும் போக… போக…தெரியும்’” என ராமதாஸ் பாடல் பாடியபடி சிரித்துக் கொண்டே கிளம்பினார்.