
காரைக்குடி மேயர் முத்துதுரைக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் மதுரை மாநகராட்சியில் பொறுப்பு வகித்த 5 மண்டலத் தலைவர்களை, திமுக தலைமை ராஜினாமா செய்ய வைத்துள்ளதுடன், மேயரையும் மாற்ற உள்ளதாகப் பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காரைக்குடி மாநகராட்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் சிவகங்கை மாவட்ட திமுகவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
காரைக்குடி துணை மேயரும், திமுக நகரச் செயலாளருமான குணசேகரன் தலைமையில் திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயர் முத்துதுரைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
காரைக்குடி நகராட்சி சேர்மனாக இருந்த முத்துதுரை, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு மேயராகப் பொறுப்பு வகிக்கிறார்.
முத்துதுரைக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும்கட்சி உறுப்பினர்களாலும் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளர் என்பதால் கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த நிலையில் காரைக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கியது. 36 உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தை துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 பேர் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
அதன் பின்பு துணை மேயர் குணசேகரன் தலைமையில் 22 மாமன்ற உறுப்பினர்கள், மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் குணசேகரன், “இது காரைக்குடி மாநகராட்சி நலனுக்காக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவு. மேயர் அவருடைய வார்டைத் தவிர எந்த வார்டுக்கும் நிதி ஒதுக்குவதில்லை.
கவுன்சிலர்களை மிகவும் மோசமாக நடத்துகிறார். மரியாதையாகப் பேசுவதில்லை. அதனால், அவரை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துள்ளோம். இப்போது 22 பேருடன் இன்னும் 2 கவுன்சிலர்களும் கையெழுத்திட உள்ளார்கள்.” என்றார்.
இந்த சம்பவம் சிவகங்கை மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.