
கர்நாடக மாநிலம் பிடகளு கிராமத்தில் நவீன் என்பவருக்குச் சொந்தமான உயிரி எரிவாயு நிலையம் இருக்கிறது. அந்த வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் எரிவாயு தொட்டிக்குள்ளிருந்து நேற்று திடீரென வித்தியாசமான உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது.
அருகில் சென்ற நவீன், தொட்டிக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார். புலிக் குட்டி ஒன்று உள்ளே விழுந்து மேலே வர முடியாமல் தவிப்பதைக் கண்டிருக்கிறார். உடனடியாக வனத்துறை தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதிக்குக் குழுவாகச் சென்ற வனத்துறையினர், சில மணி நேரங்களில் அந்தப் புலிக் குட்டியைப் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மைசூரு அருகில் உள்ள கூர்கல்லி வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள உதவி வனப்பாதுகாவலர் சுமத்ரா, “கர்நாடக மாநிலம், எச்.டி. கோட்டே வனப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய திறந்தவெளி பயோ கேஸ் தொட்டிக்குள் புலிக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து 6 மாதமே ஆன இந்த ஆண் புலிக் குட்டி வழி தவறி ஊருக்குள் வந்திருக்கலாம் அல்லது தாய் புலியை இழந்திருக்கலாம். அந்தப் புலிக் குட்டி மீட்கப்பட்ட பகுதியில் இரண்டு செம்மறியாடுகள் கடிபட்டு இறந்து கிடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
புலிக் குட்டியின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்து மீண்டும் வனத்திற்குள் விடுவதா அல்லது மறுவாழ்வு மையத்தில் வைத்துப் பராமரிப்பதா போன்ற முடிவுகள் எடுக்கப்படும்” என்றார் .