
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே வாக்காளர் இறுதிப்பட்டியலை தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. பிறகு திடீர் அறிவிப்பாக அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி ஜூலை மாதம் வரை இதற்கான காலக்கெடுவாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்தது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி அரசுக்கு சாதகமாக செயல்பட தான் தேர்தல் ஆணையம் இப்படி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது என காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர். உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது .
இப்பொழுது மட்டும் ஏன் அவசர அவசரமாக இதை செய்கிறார்கள்?
இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஜோய்மாலியா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர் நாராயணன், அபிஷேக் மனு ஷிங்வி, கபில் சிப்பில் ஆகியோர், “வாக்காளர் பட்டியலை சுருக்கமான திருத்தம், தீவிர திருத்தம் என இரண்டு வகையில் மட்டும் தான் மேற்கொள்ள முடியும். அதன்படி தற்பொழுது தீவிர திருத்தத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் தேர்தலுக்கு சில மாதங்களை உள்ள நிலையில் கடைசி நேரத்தில் ஏன் இதனை தேர்தல் ஆணையம் செய்கிறது? கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த தீவிர திருத்த பணி என்பது மேற்கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு 10 தேர்தல்கள் பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்து இருக்கிறது. அப்பொழுதெல்லாம் செய்யாமல் இப்பொழுது மட்டும் ஏன் அவசர அவசரமாக இதை செய்கிறார்கள்? மேலும் ஆதார் அடையாள அட்டையை ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என அறிவித்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் விளையாட்டு பிரபலங்கள் திரை பிரபலங்கள் ஆகியோருக்கு இந்த சரிபார்ப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கு கொடுத்து இருக்கிறார்கள். இப்படி முழுக்க முழுக்க தன்னிச்சையாகவும் அதிகார துஷ்பிரயோகமாகவும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருக்கிறது” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “ இத்தகைய பணிகளை மேற்கொள்வது என்பது அரசியல் சாசனத்தின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய அதிகாரம். மேலும் இத்தகைய திருத்த பணிகளை எப்பொழுது மேற்கொள்ளலாம் என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். அதில் தலையிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
மேலும் இதற்கான தரவுகளையும் அவர்கள் சரியாக வைத்திருக்கிறார்கள். சிக்கல் நிறைந்த இந்த வேலையை அவர்கள் ஏன் தானாகவே இழுத்துப் போட்டுக் கொள்ளப் போகிறார்கள். இந்திய தேர்தல்களில் இந்திய குடிமக்களாக இல்லாதவர்கள் வாக்களிக்கக் கூடாது என்பது அடிப்படை விதி அதை முறையாக செயல்படுத்த எத்தகைய நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு இருக்கிறது. அதை செய்யாதீர்கள் என எப்படி கூற முடியும்?” என கேள்வி எழுப்பினர்.
இந்திய குடிமக்கள் இல்லையா?
அதற்கு பதில் அளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், “இந்தியாவில் யார் இந்திய குடிமக்கள்… யார் குடிமக்கள் இல்லை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் இந்திய குடிமக்களா இல்லையா என்பதை மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை கையில் வைத்திருப்பவர்களிடம் தேர்தல் ஆணையம் கேட்பது என்பதும் அவர்களது அவர்களை இந்திய குடிமக்கள் இல்லை என சொல்வதும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படாத அதிகாரங்கள்.
உங்களிடம் நாங்கள் ஆவணத்தை கொடுக்கிறோம். அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து தாருங்கள் அதை நாங்கள் ஏற்க மறுத்தால் நீங்கள் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் சொல்கிறது. இது ஒட்டுமொத்த இந்திய தேர்தல் அரசியல் முறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆதார் அட்டை என்பதை உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என எப்படி தேர்தல் ஆணையம் சொல்ல முடியும். பீகார் மாநிலத்தை பொருத்தவரை ஒரு கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள்.

தகுதி இருப்பவர்கள் உரிமை பாதுகாக்கப்படுகிறது!
தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கக் கூடிய குறைந்தபட்ச கால அவகாசத்தில் அவர்கள் எப்படி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்? நிறைய பேர் வெளிநாடுகளில் பணி செய்கிறார்கள். அப்படி என்றால் அவர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து இவர்கள் நீக்கிவிடுவார்களா?” என கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “தற்போது நாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள் என்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 324 இன் கீழ் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் தான் செய்து வருகிறோம்.
ஒரு நபர் இரண்டு இடங்களில் வாக்களிப்பதை தடுப்பது, இந்திய குடிமக்களாக இல்லாதவர்கள் வாக்களிப்பதை தடுப்பது போன்றவை எங்களுக்கு முன்பு இருக்கக்கூடிய கடமை. அதை நாங்கள் செய்கிறோம். மற்றபடி இந்த விஷயத்தில் சாதி மதம் போன்ற எந்த ஒரு பாகுபாட்டையும் நாங்கள் கடைபிடிக்கவில்லை. தகுதி இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறோம். இதன் மூலம் தகுதி இருப்பவர்கள் உரிமை பாதுகாக்கப்படுகிறது” என விளக்கங்களை அளித்தார்.
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தொடங்க இருக்கின்றது. அதற்குள் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் ஏன் எடுத்துள்ளது. மேலும் 30 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பலர் அது பெயர்களும் இதிலிருந்து விடுபட்டுப் போகும் அபாயம் இருப்பதாக அச்சமெழுகின்றது. மேலும் ஆதார் விவகாரத்தில் நீங்கள் இவ்வளவு கண்டிப்புடன் இருப்பதற்கு காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினார்கள்.
பிறகு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த விஷயத்தை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அதை அவர்கள் பயன்படுத்தும் நடைமுறை மற்றும் காலக்கெடு ஆகிய விஷயங்களை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே வரும் ஜூலை 28-ம் தேதி இந்த விவகாரம் உரிய அமர்வு முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்படும். அடுத்த ஒரு வார காலத்திற்குள் இந்த விவகாரத்தில் பதில் மனு மற்றும் எதிர் பதில் மனு தாக்கல் செய்யலாம்” எனக்கூறி வழக்கை ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்பு ஆவணங்களாக சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தல் கொடுக்கிறோம். இருப்பினும் அதை ஏற்றுக் கொள்வது என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறி வழக்கினை ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் காரணமாக பீகாரில் தற்பொழுது தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் பணிகளை தொடர்ந்து அவர்கள் மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் வரைவு இறுதிப்பட்டியலை வெளியிட மாட்டோம் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.