
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் “போலி திருமணங்கள்” (Fake Weddings) என்ற புதிய ட்ரெண்ட் பிரபலமடைந்து வருகிறது.
இது ஒரு உண்மையான திருமணம் இல்லை, மாறாக திருமண விழாவின் உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் பாரம்பரிய அம்சங்களை அனுபவிக்க விரும்புவோருக்கு இது ஒரு புதுமையான பொழுதுபோக்காக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்த ட்ரெண்ட் வேகமாகப் பரவி வருகிறது.
போலி திருமணம் என்றால் என்ன?
இந்தப் போலி திருமணத்தில் உண்மையான மணமக்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் திருமண விழாவைப் போலவே இது நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்பவர்கள், மணமக்கள், உறவினர்கள், நண்பர்கள் போல நடித்து, திருமணத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். பாரம்பர்ய அலங்காரங்கள், மெஹந்தி, சங்கீத், நடனம், இசை, மற்றும் சுவையான உணவு என அனைத்தும் இதில் இடம்பெறுகின்றன.
இந்த ட்ரெண்ட் ஏன் பிரபலமாகிறது?
இந்தியாவில் உண்மையான திருமணங்களின் செலவு மற்றும் அழுத்தம் அதிகரித்து வருவதால், இளைஞர்கள் இந்தப் போலி திருமணங்களை ஒரு மகிழ்ச்சிக்காக விரும்புகின்றனர்.
உண்மையான திருமணத்தின் பொறுப்புகள் இல்லாமல், அதன் மகிழ்ச்சியை அனுபவிக்க இளைஞர்கள் விரும்புகின்றனர். இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான பார்ட்டி அனுபவத்தை இது கொடுக்கிறது.

எங்கு நடக்கிறது?
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் இந்தப் போலி திருமணங்கள் பிரபலமாகி வருகின்றன. ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றன.
பாரம்பர்ய உடைகள், புரோகிதர்கள் போல நடிப்பவர்கள் மற்றும் திருமணச் சடங்குகளைப் போலவே அமைக்கப்பட்ட அரங்குகள் என அனைத்தும் இதில் உள்ளன.
சிலர் இந்தப் போலி திருமணங்களை கலாசாரத்திற்கு எதிரானவை என்று விமர்சிக்கின்றனர். திருமணம் என்பது புனிதமான பந்தம், இதை விளையாட்டாக மாற்றுவது தவறு என்கின்றனர். ஆனால், ஆதரவாளர்கள் இது வெறும் பொழுதுபோக்கு என்றும், இதில் எந்தத் தவறும் இல்லை என்றும் வாதிடுகின்றனர்.